Sponsored

Deepababu's "Chinna Chinna Poove" - Story Thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by deepababu, Feb 11, 2017.

 1. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  #6#
  "ஹேய் குட்டிபப்பூ... கண்ணுக்குத் தெரியாமல் நீ செய்கின்ற வேலையெல்லாம் புதிதாக வீட்டிற்கு வருகின்ற யாராவது பார்த்தால்... ஐயோ! இந்த வீட்டில் ஏதோ ஜெகன் மோகினி இருக்கும் போலிருக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!" என்று ஹஹாஹஹா என்று கண்களில் நீர் வழிய வாய் விட்டு சிரித்தான் ரமணன்.

  "ஜெகன் மோகினியா... அப்படின்னா என்னப்பா?" என்றாள் அவன் சிரித்ததால் உண்டான மகிழ்ச்சி குரலில் பொங்க.

  "அப்படின்னா... டிவியில் மந்திர மாயஜால படங்கள் போடுவார்கள் இல்லை... அதில் வரும் ஒரு கேரக்டர்! யார் கண்களுக்கும் தெரியாமல் அது இந்த மாதிரி தான் ஏதாவது வேலை செய்யும்!" என்றான் புன்னகையுடன்.

  "ஓ... சரி சரி!" என்றவள் கப்பில் சர்க்கரை போடுவதை கண்டவன், தன்னை மறந்து இயல்பாக எழுந்த குழந்தை என்ற உணர்வில் அவளைத் தடுத்தான்.

  "பால் ரொம்ப சூடாகி விட்டது போலிருக்கிறது... நீ கப்பில் ஊற்ற வேண்டாம்டா. கைகளில் கொட்டி விடப் போகிறது!" என்று வேகமாக எழுந்து பதற்றத்தோடு அவளருகில் வந்தான்.

  "அச்சோ... அப்பா நான் ஏற்கனவே செத்து போனவள்பா. நீங்க மறந்து போய்ட்டீங்க... என்னை இந்த சூடு ஒன்றும் செய்யாது!" என்று கிளுக்கிச் சிரித்தபடி பாலை எடுத்து கப்பில் ஊற்றினாள்.

  ரமணன் முகம் இறுக எதுவும் பேசாமல் திரும்பச் சென்று கட்டிலில் அமர்ந்தான்.

  பால் கப்பை டீபாய் மேல் வைத்தவள், அவனோடு உரசியபடி கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

  அவன் எதுவும் பேசாமல் புருவத்தை சுளித்தப்படி உம்மென்று அமர்ந்திருப்பதை, அப்பொழுது தான் கவனித்தவள் போல, "என்னாச்சுப்பா?" என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

  "நீ பேசுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை பாப்பா... அதென்ன எப்பொழுது பார் நான் இறந்து விட்டேன்... இறந்து விட்டேன் என்று சொல்லி சிரிக்கிறாய், எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. நீ கடவுளிடம் இருக்கும் தெய்வக் குழந்தை... என்று என்னிடம் வந்தாயோ அதிலிருந்து என் மகள் நீ. உன் சுகதுக்கம் அனைத்திலும் எனக்கு பங்கு இருக்கிறது. இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது சொன்னாய் என்றால் நான் எப்பொழுதும் உன்னோடு பேசவே மாட்டேன். எவ்வளவு பெரிய வார்த்தையை சர்வ சாதரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறாய் நீ..." என்று அவன் கோபமாக பேசிக் கொண்டே போனான்.

  "ஸாரிப்பா... இனிமேல் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன். என்னுடன் பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்பா..." என்று அவள் தேம்பிக் கொண்டே கூறவும் தான் அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்பதே ரமணனுக்கு தெரிந்தது.

  சட்டென்று திகைத்தவனுக்கு, அப்பொழுது தான் தன் தவறு புரிந்தது.

  'ஐயோ... என்ன மடத்தனம் செய்து விட்டேன். சிறு குழந்தையிடம் போய் என் மன வருத்தத்தையும், கோபத்தையும் காட்டி விட்டேனே...' என்று வருந்தியவன், அவளைத் தன்னோடு சேர்ந்து அணைத்துக் கொண்டான்.

  "ஐ ஆம் சாரிடா கண்ணம்மா! அப்பா தான் தப்பு செய்து விட்டேன். உனக்கு என்ன தெரியும் குழந்தை என்று யோசிக்காமல் கோபமாக பேசி விட்டேன். ஆனால் தயவுசெய்து இனிமேல் அந்த மாதிரி எதுவும் சொல்லாதேடா... அப்பாவுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது!" என்றான் வருத்தமாக.

  "ம்... சரிப்பா. இனிமேல் நான் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை. நீங்க டென்ஷன் ஆகாதீங்க... சாப்பிடுங்க!" என்றாள் பொறுப்புடன்.

  மெல்ல சிரித்தவன், "என் செல்ல புஜ்ஜு..." என்று கொஞ்சியபடி மீண்டும் ஆசையாக அணைத்துக் கொண்டான்.

  சற்று நேரம் கழித்து, தன் லேப்பில் வந்திருக்கும் முக்கியமான மெயிலை செக் செய்து ரிப்ளை செய்துக் கொண்டிருந்தான் ரமணன்.

  "அப்பா!"

  "ம்..."

  "நம்ம வீட்டுக்கு பின்னாடி ஒரு இடத்துல அன்னிக்கு பூவெல்லாம் வைச்சுட்டு அழுதீங்களே... அங்க யார் இருக்காங்க?" என்று அவள் கேட்டதும், அவன் விரல்கள் டைப் செய்ய மறுத்து வேலை நிறுத்தம் செய்தன.

  ரமணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அவள் மீண்டும் அப்பா என்று அழைத்தாள்.

  "ம்..." என்றான்.

  "என்னாச்சு?" என்று கேட்டாள்.

  "ஒன்றும் இல்லைம்மா..." என்று கண்கள் மூடி ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்தியவன், பின் பெருமூச்செரிந்து மெல்ல கண்களைத் திறந்தான்.

  தன் கேள்விக்கு பதில் எதிர்பார்த்து அவள் தன்னையே நோக்கி கொண்டிருப்பதை... அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

  "அந்த சமாதியில் இருப்பது... உன் அக்கா!" என்றான் அமைதியாக.

  "அக்காவா...?"

  "ம்... அப்பாவுடைய முதல் பெண்!" என்றான் சற்று தடுமாற்றத்துடன்.

  குரலில் எந்தவித வேறுபாடும் தோன்றிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், விழிகளை மறந்து விட்டான்.

  அதிலிருந்து புறப்பட்ட நீர் அவன் கன்னங்கள் தாண்டி கழுத்தில் இறங்கியது.

  "அச்சோ... சாரிப்பா, நான் உங்களை அழ வைத்து விட்டேன்!" என்றாள் அவனைக் கட்டி கொண்டு கண்ணீர் குரலில்.

  மெல்ல தன்னை சுதாரித்தவன், "பரவாயில்லைடா கண்ணம்மா... என் வாழ்வின் மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத துன்பம் அது. ஆனால் இன்று நீ வந்துவிட்டதால்... அதனுடைய பாதிப்பு எனக்கு சற்றுக் குறைந்துள்ளது!" என்று ஆதரவு தேடும் குழந்தை போல் அவள் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டான்.

  "அப்பா... அவங்க..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவள், சட்டென்று அமைதியானாள்.

  "என்னம்மா?"

  "ஒன்றுமில்லைப்பா..." என்றாள் தயக்கத்துடன்.

  "ஹேய்... என்ன? ஏதோ கேட்க வந்து விட்டு அமைதியாகி விட்டாய்... அப்பாவிடம் கேட்பதற்கென்ன சொல்!"

  "இல்லை... வந்து... அந்த அக்காவும் இற... ம்... இல்லையில்லை... சாமிகிட்ட போயிட்டாங்களா?" என்று கேட்டாள்.

  அவளின் தயக்கத்தையும், புத்திசாலித்தனத்தையும் எண்ணி, அந்த நேரத்திலும் முகம் கொள்ளா சிரிப்புத் தோன்றியது ரமணனுக்கு.

  "என் ஸ்வீட் பப்பு... என் பாப்பா எவ்வளவு புத்திசாலித்தனமாக யோசித்துப் பேசுகிறாள்!" என்று அவளைக் கொஞ்சியபடி மீண்டும் சிரித்தவன், லேசாக சாய்ந்தமர்ந்தான்.

  "ஆமாம்டா... சாமியிடம் சென்று விட்டாள்!"

  "ஏன் பா... அவங்களுக்கு என்னாச்சு?"

  "ம்..." என்று புருவம் சுருக்கியபடி இழுத்தவன், "ஒன்றுமில்லைடா... உடம்பு சரியில்லாமல் அந்த மாதிரி ஆயிற்று!" என்று வேகமாக கூறி விஷயத்தை அத்தோடு முடித்தான்.

  "ஓ... அம்மா?" என்று அவள் கேட்க, அவன் முகத்தில் சற்று சலிப்பு ஏற்பட்டது.

  "ப்ச்... அவளும் இல்லை, சாமியிடம் சென்று விட்டாள். போதும் விடுடா... இதற்கு மேல் அதைப் பற்றி எதுவும் என்னிடம் கேட்காதே!" என்றான் முகத்தை சுளித்து.

  "ம்... ஓ... சரிப்பா!" என்று வேகமாக அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டாள்.

  அவளின் பொறுப்புணர்வை கண்டவனுக்கு மெல்ல புன்னகை அரும்பியது.

  "அப்பா மேல் கோபமாடா?" என்று கேட்டான், அவளைத் தன் கை வளைவுக்குள் சிறை செய்தபடி.

  "சேச்சே... அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு அதைப் பற்றி பேச பிடிக்கலைன்னு தெரிந்தது, அதனால் தான் விட்டு விட்டேன்!"

  "ஹப்பா... இந்த குட்டி வயதிலேயே என் பாப்பா... எவ்வளவு குட் பாப்பாவாக இருக்கிறாள்...!" என்று கூறி அவன் விழிகளை விரித்து வியந்ததும், அவள் கிளுக்கிச் சிரித்தாள்.

  சற்று சிரித்து ஓய்ந்த பின்னர், "அப்பா! ஒன்றே ஒன்று கேட்கட்டும்மா?" என்று அவனிடம் அனுமதி கேட்டாள்.

  "ம்... கேளுடா?"

  "நான் ஸ்கூலுக்கெல்லாம் போகலை... அக்கா ஸ்கூலுக்கு போனாங்களா?" என்று கேட்டாள்.

  அவன் முகம் வேதனையில் வாட, "இல்லைடாம்மா... அவள் தவறும் பொழுது...", தொண்டையில் அடைத்ததை விழுங்கி சமாளித்தவன், "ஆறு மாதக் குழந்தை!" என்றான் விழிகள் கலங்க.

  "ஐயோ... ரொம்ப குட்டிப்பாப்பாவா?" என்றாள் பதற்றத்துடன்.

  "ம்..." என்று சோர்வாக பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் மொபைல் ரிங் ஆனது.

  எடுத்து டிஸ்ப்ளேவில் காலர் நேம்மை பார்த்தவன், பிக்கப் செய்து பேச ஆரம்பித்தான்.

  பத்து நிமிடங்கள் கழித்து, லைனை கட் செய்து விட்டு மொபைலை கீழே வைத்தவன், "குட்டிம்மா!" என்று அழைத்தான்.

  "ஆங்...!" என்று பதில் குரல் கொடுத்தாள்.

  "என்ன செய்துக் கொண்டிருந்தாய் இவ்வளவு நேரம்?" என்று கேட்டான்.

  "சும்மா உங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..."

  "ஓ... என்னிடம் பேசுவதற்கு முன்னாலும் இதே வேலையை தான் செய்து கொண்டிருந்திருப்பாய்... ரொம்ப போராக இருந்திருக்கும் இல்லை...?" என்று அவன் வினவ, அவளோ அதை மறுத்து பதிலளித்தாள்.

  "இல்லையே... நீங்க செய்றதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறதுன்னா... எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹப்பா... எல்லோரையும் எப்படி மிரட்டுவீங்க... அவங்கெல்லாம் உங்களுக்கு பயப்படறதை பார்த்தால் பாவமாகவும் இருக்கும்... அதேசமயம் எங்கப்பாவை பார்த்து பயப்படறாங்கன்னு பெருமையாகவும் இருக்கும்!" என்று கூறி ஹஹாவென்று சிரித்தாள்.

  இவனும் சிரித்தபடி அவள் தலையில் செல்லமாக தட்டினான், "கேடி!" என்று.

  சில நிமிடங்களில், "அப்பா!" என்று அவனை மீண்டும் அழைத்தாள் அவள்.

  "என்ன அடுத்த சந்தேகமா? என்ன கொஞ்ச நேரமாக மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறாய்... சரி சொல்லு, என்ன தெரிய வேண்டும்?" என்று கேட்டான்.

  "இல்லை... நான் பிறக்கனும்னா... அம்மா வேண்டும் இல்லை? நான் அவங்க வயிற்றில் தானே வளருவேன். ஆனால் இங்கே அம்மா இல்லையே... அப்புறம் எப்படி நான் பிறப்பேன்?" என்று அவள் கேட்டு முடித்த மறு நொடி அவன் அதிர்ந்தான்.

  அவள் கேள்வி அவனை பெரும் திகைப்புக்கு உள்ளாக்கியது.

  இது ஒரு சாதாரண விஷயம்... உலக நடப்பு, இயல்பு. ஆனால் தன் தனிமையை போக்க வந்த குழந்தை, தன் மேல் பாசமாக இருந்து தன்னை கவனித்து கொள்கிறாள். நாமும் அவளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று அதையும் இதையும் எண்ணி ஆவலாக கோட்டை கட்டிக் கொண்டிருந்தவனுக்கு, தங்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக அம்மா தேவை என்பதை எப்படி மறந்து போனேன் என்று எண்ணி குழம்பினான்.

  "அப்பா..." என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் அவள்.

  "என்னப்பா... எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க? அம்மா எங்கே இருக்கிறாங்க?... அவங்களை எப்படி கண்டுப்பிடிக்கிறது? எப்போ அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டி வருவது?" என்று அவனை மாற்றி மாற்றி கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.

  "ப்ச்... உஷ்... ஏய் குட்டிம்மா! கொஞ்சம் அமைதியாக இரு. இப்படி திடீரென்று அம்மாவை கேட்டால்... எங்கே போய்... எப்படி தேடிக் கூட்டி வருவது நான்..." என்று அவளை சற்று அதட்டியபடி புலம்பினான்.

  'ஐயோ... இந்த நான்கு மணி நேரமாக... இவள் எனக்கு கிடைக்கப் போகின்றாளே என்ற சந்தோசத்தில் மற்ற எதையும் யோசிக்காமல் விட்டுவிட்டேனே... இப்பொழுது என்ன செய்வது...?'

  'இவளுக்கு அம்மா வேண்டுமென்றால்... எனக்கு மனைவி அல்லவா? நான் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா... அது எப்படி? என் வாழ்வில் மீண்டும் ஒரு பெண்ணா? சேச்சே முடியாது... எனக்கு திருமண வாழ்வில் சற்றும் விருப்பமில்லையே... வெறுப்பாக அல்லவா இருக்கின்றது. திருமணம் தவிர்த்து இதற்கு வேறு வழியே இல்லையா...' என்று தன் கன்னத்தை தடவியவாறு தீவிரமாக யோசித்தான்.

  சட்டென்று மனதில் ஒரு மின்னல் வெட்டி, முகமெல்லாம் பிரகாசமாகியது.

  வாடகைத் தாய்!

  வேகமாக தன் அருகில் அமர்ந்திருந்த குழந்தையின் கரம் பற்றியவன், "ஹேய் குட்டிப்பாப்பு! உனக்கு அப்பா மட்டும் போதும் என்ன? உனக்கு எந்த கஷ்டமும் நேராமல் அப்பா நானே உன்னை நன்றாக பத்திரமாக பார்த்து கொள்வேன். அம்மாவெல்லாம் தேவையில்லை... நாம் இருவர் மட்டும் ரொம்ப ஜாலியாக சந்தோசமாக இருக்கலாம்... எப்படி?" என்றான் உற்சாகமாக.

  அவள் உடனே, "அம்மா இல்லாமல் நான் எப்படிப்பா பிறப்பேன்?" என்று வேகமாக கேட்டாள்.

  'ப்ச்... இவள் ஒருத்தி... மாற்றி மாற்றி கேள்வியை கேட்டே என் வாயைப் பிடுங்குகின்றாள்!' என்று எண்ணி பெருமூச்சு விட்டவன், அவளுக்கேற்றவாறு வாடகைத் தாய் பற்றி விளக்க முற்பட்டான்.

  "இல்லைடா... நீ பிறப்பதற்கு அம்மா நம் கூடவே இருக்க வேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லை... நாம் ஹாஸ்பிட்டல் போய் டாக்டரிடம் சொல்லி நீ பிறக்க ஹெல்ப் கேட்டோம் என்றால்... அவர்கள் அங்கேயே அம்மா இல்லாமல் நீ நல்லபடியாக பிறக்க ட்ரீட்மென்ட் தருவார்கள். அதற்கு பிறகு நீ பிறந்தவுடன் நாம் நம் வீட்டிற்கு வந்து விடலாம்... நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன்!" என்று மீண்டும் அவளுக்கு அவனை உணர்த்த முயன்றான் ரமணன்.

  அவள் எதுவும் பேசாமல் "ப்ச்..." என்றதோடு முடித்துக் கொண்டாள்.

  அவனுக்கோ அவளின் சலிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
  "என்னம்மா? என் மேல் நம்பிக்கையில்லையா?" என்றான் ஏக்கம் நிறைந்த குரலில்.

  "அச்சோ... அப்படியில்லைப்பா. நான் உங்களை ரொம்ப ரொம்ப நம்பறேன்... உங்களை தவிர வேறு யாராலும் என்னை நன்றாக பார்த்து கொள்ள முடியாது!" என்றாள் அவன் மடியில் சாய்ந்து கொண்டு ஆணித்தரமாக.

  "அப்புறம் என்னம்மா?" என்று சற்று சோர்வுடன் வினவினான்.

  "இல்லைப்பா... அம்மா எப்பவும் நம்ம கூடவே இருந்தாங்கன்னா... நம்மளை பாசமா கவனிச்சுப்பாங்க இல்லை? நமக்கு வேணுங்கறதையெல்லாம் நாம கேட்காமலே ஆசையா செஞ்சு தருவாங்க... நீங்க என்னையும் பார்த்துகிட்டு ஆபிஸையும் பார்க்கிறதுன்னா எவ்வளவு கஷ்டம்? இதுவே அம்மா இருந்தாங்கன்னா... நீங்க ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தால், என் கூடவும் அம்மா கூடவும் ஜாலியா விளையாடலாம். உங்களுக்கு டென்ஷன் இருக்காது... நமக்கு உடம்பு முடியலைன்னா அவங்க நல்லா பார்த்துப்பாங்க. இப்ப பாருங்க உங்களுக்கு மருந்து போட கூட யாரும் இல்லை..." என்றாள் நீண்ட விளக்கமாக.

  இந்த தடவை சலித்துக் கொள்வது ரமணன் முறையாகியது. அவன் சலித்தபடி தலையை வேறு புறம் திருப்பி கொள்ளவும், அவள் குழம்பினாள்.

  -தொடரும்
   
   
 2. Jeniragavan

  Jeniragavan Wings

  Messages:
  8
  Likes Received:
  9
  Trophy Points:
  23
   
 3. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  Thank u ma... Pls give comments on comment thread...:)
   
  star arokia viji likes this.
   
 4. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  #7#

  "என்னப்பா?" என்றாள் குழந்தை.
  "நீ நினைக்கின்ற மாதிரியெல்லாம் எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை... நமக்கு செய்வதற்கு சலித்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்!" என்றான் ரமணன் கசப்பாக.

  "ஆங்... அப்படின்னாலும் நீங்களே சொல்லிட்டீங்களே... எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைன்னு, நாம சலிச்சிக்காத மாதிரி அம்மாவை தேடி கூட்டி வருவோம்!" என்றாள் சர்வ சாதாரணமாக.

  "ஓ காட்! நீ நிஜமாகவே பாட்டியம்மா தான். இந்த வயதில் என்ன பேச்சு பேசுகிறாய்? இதெல்லாம் எங்கிருந்து கற்றுக் கொள்வாய்?" என்றான் கண்களை விரித்து ஆச்சரியமாக.

  ஹஹா என்று சிரித்தவள், "கார்டூன்ல தான்பா..." என்று பதிலளித்து அவனை அதிர வைத்தாள்.

  "வாட்?" என்றான் அதிர்ச்சியுடன்.

  "ஆமாம்பா... எங்க சித்தியோட அக்கா பசங்க அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்களா... அப்போ எப்ப பாரு கார்டூன் தான் எங்க டிவியில் ஓடும். சோட்டா பீம், டோரா புஜ்ஜி, நிஞ்சா ஹட்டோரி, டோரேமான், பார்பி சினிமா, ஆங்... சிங் சாங், மோட்டு பட்லு இந்த மாதிரி நிறைய பார்ப்பாங்க. அதை பார்த்தால் தான் தம்பியும் அமைதியா இருக்கான்னு அப்புறம் சித்தியும் அடிக்கடி அதை போட ஆரம்பிச்சுட்டாங்க!" என்று கூறி சிரித்தாள்.

  "ஓ மை காட்! கார்டூன் பார்ப்பதால் கண்களுக்கு தான் கெடுதல் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். இப்பொழுது இல்லை தெரிகிறது... அது மூளைக்கும் கெடுதல் என்று. ம்ஹுஹும்... உன்னை எல்லாம் அந்த மாதிரி பார்க்க விடாமல் வேற ஏதாவது தான் விளையாட வைக்க வேண்டும்!" என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

  "ப்ச்... அப்பா! அதை நான் பிறந்த பிறகு யோசிச்சிக்கலாம். முதலில் நாம அம்மாவை எப்படி கண்டுபிடித்து கூட்டி வருவது என்று யோசியுங்கள்!" என்றாள் அவள் கட்டளையாக.

  'உஷ் ஹப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே... இன்னும் இவளுக்கு அம்மாவைத் தேடி கண்டுப்பிடிப்பதற்குள் இவள் என்னை என்ன பாடுபடுத்துவாளோ தெரியவில்லையே...' என்றெண்ணி நீண்டதொரு மூச்சை வெளியிட்டான் ரமணன்.

  அக்குழந்தை தன்னுடன் இருப்பதை உணர்ந்து, அவளுடன் ரமணன் பேசிப் பழக ஆரம்பித்து ஒரு வாரம் ஓடி விட்டது.

  எப்பொழுதும் அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.
  ஆனால் அவர்கள் பேசிக் கொள்வதில் தான் சிக்கல் ஏற்பட்டது.


  யார் கண்களுக்கும் தெரியாத அவளின் குரலும் ரமணனுக்கு மட்டுமே கேட்டது. இதனால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதிலளிக்க நேர்ந்தால், அது மற்றவரின் பார்வையில் வித்தியாசமாகபட்டது.

  அதை தவிர்க்க ரமணன் ஒரு வேலை செய்தான். எந்நேரமும் தன் காதுகளில் ப்ளுடூத் அணிந்தவாறே சுற்றி வர ஆரம்பித்தான்.

  பழக்கமில்லாத காரணத்தால் சற்று உறுத்தலாக இருந்தாலும், அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை.

  அவளுடன் அவனும், அவனுடன் அவளும் பேசாமல் இருக்க முடியாது. அதனால் அதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள பழகி கொண்டான் அவன்.

  அவளும் சிறு குழந்தையாக இருந்தாலும், பொறுப்புணர்வோடு மற்றவர்களிடம் முக்கியமான விஷயங்களை அவன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் பொழுது எதுவும் பேசி தொந்தரவு தர மாட்டாள்.

  இப்படியே இவர்களின் வாழ்க்கையும் ஒரு வார பழக்கத்தில் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது.

  ஆனால் குட்டிச் செல்லத்திற்கு தான் ஒரு குறை. இந்த அப்பா... அம்மாவைத் தேட எதுவும் செய்ய மாட்டேங்கிறாரே... என்று.

  அன்று இரவும் அப்படித்தான் அதையே யோசித்துக் கொண்டு அவனருகில் படுத்திருந்தவள், அவன் கேட்ட ஏதோ ஒரு கேள்வியை கவனிக்காததால்... பதிலளிக்காமல் அமைதியாக இருந்தாள்.

  "குட்டிம்மா! என்னவாயிற்றுடா... ஏன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றாய்? உடம்பு எதுவும் முடியவில்லையா..." என்று கேட்டு கவலையோடு அவளின் முதுகைத் தடவினான் ரமணன்.

  தனது அப்பாவின் கண் மூடித்தனமான பாசத்தை எண்ணி அவள் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

  எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்... ஒருவர் மீது நேசம் வைத்து விட்டால் எதையும் யோசிக்க மறந்து விடுவார்கள் போலிருக்கிறது.

  தான் இறந்து விட்டவள் என்பதை மறந்து தன் உடல்நிலைக் குறித்து கவலையுடன் அவன் விசாரிக்கவும், முதலில் மலர்ந்தவளுக்கு பின்பு கண்கள் கலங்கியது.

  வேகமாக அவனை கட்டிக் கொண்டு, "ஐ லவ் யூ பா!" என்று அழ ஆரம்பித்தாள்.

  " ஹேய்... என்னடாம்மா இது?" என்றவனின் விழிகளும் கலங்கியது.

  அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டு, "மீ டூ டா செல்லம்!" என்று அவளின் ஸ்பரிஸத்தை ஆசையுடன் அனுபவித்தவாறு கண்களை மூடிக் கொண்டான் அவன்.

  "குட்டிபட்டு! என்னடா ஆயிற்று... ஏன் டல்லாக இருக்கின்றாய்?" என்று சற்று நேரத்தில் மீண்டும் அவளிடம் கேட்டான் ரமணன்.

  "இல்லைப்பா... எனக்கு பயமாக இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அம்மா கிடைத்து நான் அவங்க வயிற்றுக்குள் போகலைன்னா... கடவுள் என்னை வேற யார் வீட்டுக்காவது அனுப்பிடுவாங்களோன்னு..." என்றாள் குரல் நடுங்க.

  "என்ன?" என்று திடுக்கிட்டு வேகமாக எழுந்தமர்ந்தான் ரமணன்.

  அவன் மனம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

  "என்ன... என்னம்மா சொல்கின்றாய் நீ? என்னை விட்டு வேறு எங்கேயாவது சென்று விடுவாயா... இல்லைமா வேண்டாம் ப்ளீஸ். அப்பா கூடவே எப்பொழுதும் இரம்மா... அதற்காக நான் என்ன வேண்டுமென்றாலும் செய்கின்றேன். உன்னை வேறு எங்கும் அனுப்ப மாட்டேன் நான்..." என்று அவளை கட்டிக் கொண்டு புலம்ப ஆரம்பித்தான் அவன்.

  "எனக்கும் அப்படித்தான்பா... உங்களை விட்டு வேறெங்கும் நான் போக மாட்டேன். ஆனால் சீக்கிரம் அம்மா வேண்டுமே... இன்னும் ஒரு மாதத்திற்குள் உடலற்ற நான் இந்த பூமியில் உயிராக உருவாக வேண்டும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார். அதற்கு மேல் நான் இந்த மாதிரி ஆன்மாவாக சுற்ற முடியாதாம்!" என்றாள் கவலையோடு.

  அவள் கூறுவதையெல்லாம் கேட்க கேட்க அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.

  'என்ன சொல்கின்றாள் இவள்? ஒரு வீட்டை காலி செய்துக் கொண்டு அடுத்த வீட்டிற்கு போகின்றேன்... என்கின்ற மாதிரி எவ்வளவு சாதாரணமாக சொல்லுகிறாள். இந்த கடவுளும் தான் அனைவரின் வாழ்க்கையிலும் என்னமாய் கணக்கு போட்டு விளையாடுகிறார்... ஒன்றும் புரியவில்லையே?' என்று குழம்பினான்.

  சரி நம்ம பிரச்சினையே தலைக்கு மேல் இருக்கின்றது... இதில் அவர் வேலையை வேறு நினைத்து நாம் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும் என எண்ணியவன், இப்பொழுது உடனடியாக எனக்கு ஒரு மனைவி தேவை... எப்படி?

  எங்கே போய் தேடுவது? இவ்வளவு குறுகிய காலக்கட்டத்தில் அமைகின்ற பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? வருகின்றவளால் தங்களின் வாழ்வு எவ்வாறெல்லாம் மாறுமோ... என்று நினைத்து பயமாக இருந்தது.

  அவன் தான் கூறிய செய்தியால் தீவிர சிந்தனையில் இருப்பதை கண்ட குழந்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

  ஒன்றும் புரியாமல் தடுமாறியவன், "இதை ஏன்டா நீ முன்னரே சொல்லவில்லை?" என்று தவிப்புடன் கேட்டான்.

  குறுகிய காலத்தில் தனக்கு ஒரு மனைவியையும் தேடிக் கொள்ள வேண்டும், இவளையும் வேறு எங்கும் செல்ல விடாமல் தனக்கு மகளாகவே இந்த வீட்டில் பிறக்க வைக்க வேண்டும் என்று அவன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இமாலய கடமையை நினைத்து அவனுக்கு திகிலாக இருந்தது.

  "உங்களிடம் அம்மா வேண்டும் என்று சொல்லி விட்டதால்... நீங்களே தேடி கூட்டிட்டு வருவீங்கன்னு நினைச்சேன் பா. ஆனால் நீங்க என்னடான்னா... எப்போ பாரு ஆபிஸ் வேலையிலேயே பிஸியாக இருந்தீங்க. அம்மாவுக்காக ஒண்ணுமே செய்யலை... அதனால் தான் எனக்கு பயம் வந்து இப்போ சொன்னேன்பா!" என்றாள்.

  அவனின் நெஞ்சமோ அமைதி இழந்து தவிக்க ஆரம்பித்தது.

  என்ன செய்வதென்றே தெரியவில்லை? ஆனால் ஏதோ ஒன்று செய்து தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தான்.

  முதல் வேலையாக மறுநாள் காலை தன் ஜி.எம்முக்கு போன் செய்து, முக்கியமான வேலைத் தவிர மற்ற விஷயங்கள் அனைத்தையும் அவரையே பார்த்து கொள்ள கூறி விட்டான்.

  நானாக அலுவலகம் வரும் வரை தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு விட்டான்.

  இனி பெண் தேடும் படலத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெருமூச்செரிந்தான்.

  எங்கே சென்று... எப்படி பெண்ணை தேடுவது... என்று குழம்பித் தவித்தான் ரமணன்.

  ஏற்கனவே மணம் புரிந்தவன் தான் என்றாலும்... அந்த வாழ்க்கையே வேறு. அவனுக்கு பெண் பார்த்தலிருந்து... திருமணம் தொடர்பான அனைத்து வேலைகளையும் அவன் அப்பாவே பார்த்துக் கொண்டார்.

  அவனுக்கும் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் அதில் எல்லாம் பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. என்னவோ செய்யட்டும் என்று விட்டு விட்டான்.

  அந்த வாழ்க்கையையும் ஏனோ தானோவென்று என்னமோ வாழ்ந்து முடித்தாகி விட்டது என்று பெருமூச்சுவிட்டவன், தன் தொடையில் முழங்கையை ஊன்றி சோர்வாக தலையை தாங்கி கொண்டான்.

  "என்னாச்சுப்பா?" என்று கேட்டு அவனைக் கலைத்தாள் குழந்தை.

  "ம்... இல்லைம்மா. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கின்றேன்!"

  "அம்மாவைப் பற்றியா?"

  ஒன்றை வார்த்தையில் "ம்!" என்று மட்டும் பதிலளித்தான்.

  "டிவியில் உங்க போட்டோ கொடுத்து அம்மா வேணும்னு சொல்லலாமா... எங்க சித்தி அதை பார்ப்பாங்க... ஒரு தாத்தா சிரிச்சிக்கிட்டே பேசுவாரே... சன்டே ஆனா காலைல போடுவாங்களே...!" என்று அவனுக்கு ஆலோசகராக மாறினாள்.

  "ச்சீச்சீ... அதெல்லாம் வேண்டாம். நீ சொல்றது கல்யாணமாலை, அப்பாவோட ஸ்டேட்டஸ்க்கு அது ஒத்து வராது. அதுவுமில்லாமல் அப்பாவுக்கு இது இரண்டாவது திருமணம். அந்த மாதிரி செய்யறது எல்லாம் சரி வராது... பெண் கிடைக்க லேட்டா ஆகும். நமக்கு டைம் குறைவாக இருக்கிறது!" என்று அந்த யோசனையை உடனே மறுத்தான் அவன்.

  "மேட்ரிமோனியல் மூலம் பெண் பார்க்கலாம் என்றாலும்... அதில் யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கண்டுப்பிடிக்க லேட்டாகும்... என்ன தான் செய்வது? விளம்பரம் கொடுத்தால் நிறைய பேர் வருவார்கள் தான், ஆனால் அதில் எத்தனை பேர் பணத்திற்காக வந்திருக்கிறார்கள் என்று அவர்களை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பதற்கு நமக்கு நேரமில்லை!" என்று தன் விரல்களை டென்ஷனாக நெற்றியில் தேய்த்துக் கொண்டான்.

  "அப்பா! நான் இன்னொரு ஐடியா சொல்லட்டுமா?" என்று ஆர்வமாக கேட்டாள்.

  "நீயா...?" என்று இழுத்தவன், "சரி சொல்லு!" என்றான்.

  "நாம முந்தாநாள் ஒரு படம் பார்த்தோமே... அதில் வரும் ஹீரோ மாதிரி... கோவில், பெரிய பெரிய கடைகள், பார்க்... ம்... பீச் இந்த மாதிரி இடங்களில் போய் நாம அம்மாவை தேடினால் என்ன?" என்றாள் கூலாக.

  அவ்வளவு தான்... அதைக் கேட்ட ரமணன் பலமாக அதிர்ச்சியடைந்தான்.

  "அடிப்பாவி... ஏய் என்னை என்ன நினைத்து கொண்டிருக்கின்றாய் நீ? ரோடு ரோடாக பெண்ணைத் தேடி நான் அலைவதா... என் வயதென்ன... ரெப்யூடேஷன் என்ன? நான்... ஓ காட்! யாராவது பார்த்து சிரித்தால், அதை விட அசிங்கம் எனக்கு வேறொன்றும் இல்லை... ஐடியா தருகின்றாளாம் ஐடியா... உதை வாங்கப் போகிறாய் பார் நீ என்னிடம்!" என்று அவளை அதட்டினான் அவன்.

  உடனே உம்மென்றானாள் அவள், "என்னவோ செய்யுங்க... போங்க. நீங்களும் செய்ய மாட்டீங்க... ஐடியா குடுத்தாலும்... என்னையே திட்டுவீங்க. இப்படியே வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருங்க... அம்மா வந்திருவாங்க. ம்ஹும்... இப்பவே மதியம் ஆயிடுச்சு!" என்று சலித்துக் கொண்டாள் அவன் குட்டிபப்பு.

  அவள் பேச்சைக் கேட்டு முதலில் திகைத்தவனுக்கு, பின் மெல்ல இதழ்களில் புன்னகை அரும்பியது.

  "ம்ஹும்... பாட்டியம்மா... பாட்டியம்மா..." என்று அவளை செல்லமாக கேலி செய்து, கோபித்துக் கொண்டிருந்தவளை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

  அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது... இப்படியே வீட்டிற்குள் அமர்ந்து கொண்டிருந்தால் நேரம் தான் ஓடுமே தவிர வேறொன்றும் உருப்படியாக நடக்க போவதில்லை என்று எண்ணியவன், அதற்காக இவள் சொல்வது போல் ரோட் சைட் ரோமியோ மாதிரி தெரு தெருவாக எல்லாம் நம்மால் சுற்ற முடியாது என்று நினைத்தான்.

  'சரி இப்பொழுதைக்கு இவளை சமாதானம் செய்ய வேண்டும்!'

  "சரி குட்டிம்மா! நீ சொன்னது போல் மதியமே ஆகி விட்டது. வெளியே ஹோட்டல்க்கு சென்று சாப்பிட்டு வரலாமா?" என்று நைச்சியமாய் கேட்டான்.

  சட்டென்று அவள், "எனக்கு எதற்கு சாப்பாடு? நான் இங்கேயே இருக்கிறேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க!" என்றாள் வேகமாக.

  அவளின் வேகத்தை கண்டு சத்தமாக வாய் விட்டு சிரித்தவன், "ஹப்பா! இப்பொழுது தான் என் செல்லக் குட்டிக்கு கோபம் வந்து பார்க்கின்றேன். சரி... அப்பொழுது நீ வரவில்லையா? வெளியில் போகின்றோமே... அப்படியே உன் அம்மா எங்கேயாவது கண்களில் தென்படுகின்றாளா என்று பார்க்கலாம் என்று நினைத்தேன். சரி நீ இங்கேயே இரு, நான் போய் வருகின்றேன்!" என்று பாசாங்கு செய்து கொண்டு கிளம்பினான்.

  "இல்லையில்லை... இல்லை நானும் வரேன். இங்கே தனியாக இருந்தால் எனக்கு ரொம்ப போரடிக்கும்... ஈஈ..." என்று வழிந்தபடி வேகமாக வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டவளைக் கண்டு பொங்கிய சிரிப்பை இதழ் கடித்து உள்ளேயே அடக்கினான் ரமணன்.

  -தொடரும்
   
   
 5. sabeenaibu

  sabeenaibu Wings

  Messages:
  4
  Likes Received:
  7
  Trophy Points:
  83
  Romba vithyasamana story.. nice moving.
   
  star arokia viji, deepababu and ugina like this.
   
 6. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  Hi Sabeena!Thank u so much ma.. Pls comments threadil comments kudunga... :)
   
   
 7. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  #8#

  ரெஸ்டாரென்டில் அந்த நேரத்திற்கு அவ்வளவாக கூட்டம் ஒன்றுமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
  "அப்பா! அங்கே அந்த நாலாவது டேபிளில் உட்கார்ந்து இருக்கிறவங்களை பாருங்களேன்... அவங்க..." என்று மேலே பேசச் சென்றவளை தடுத்தான் ரமணன்.

  "ஷ்... குட்டிம்மூ... உன்னிடம் எத்தனை தடவை தான் சொல்வது. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அம்மாவாக கற்பனை செய்யாதே என்று... இதோடு பதினைந்தாவது ஆள்... கிளம்பியதிலிருந்து வருகின்ற வழியெல்லாம் நீ சொன்னது. எல்லோரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்மா... நாளைப் பின்னே நாம் இருவரும் தான் கஷ்டப்பட வேண்டும்..." என்று அவன் யாரும் அறியாதவாறு ப்ளுடூத்தில் பேசுவது போல் மெல்லிய குரலில் நீளமாக விளக்கி கொண்டிருக்க, இப்பொழுது அவள் இடைப்புகுந்தாள்.

  "அச்சோ... அப்பா... முதலில் நீங்க பேசுவதை நிறுத்துங்க!" என்றாள் அதிகாரமாக.

  "என்ன?" என்றான் அவன் திகைப்புடன்.

  "பின்னே என்ன... நான் அம்மாவென்றா சொன்னேன். நானும் வந்ததிலிருந்து அவங்களைப் பார்க்கிறேன்... அவங்க சரியாக சாப்பிடவே மாட்டேங்கிறாங்க... சும்மா ஸ்பூனை வைத்து கிளறிக்கிட்டே... யாருக்கும் தெரியாத மாதிரி கையில் கர்சீப்பை வைத்து கண்ணோரத்தில வர தண்ணியை அப்பப்ப துடைச்சிட்டிருக்காங்க, பாருங்க!" என்று அவள் கூறினாள்.

  ரமணன் அவள் குறிப்பிட்ட டேபிளைத் திரும்பி பார்த்தான்.

  குழந்தை சொன்ன டேபிளில் ஒரு இளம்பெண் மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்.

  வயதை அறுதியிட்டு கூற முடியவில்லை பார்க்க சிறு பெண் போலத் தோன்றினாள்.
  அடிக்கடி விழிகளில் சுரந்துக் கொண்டிருந்த நீரை கர்சீப்பில் ஒற்றி ஒற்றி எடுப்பதால் கண்ணோரம் லேசாக சிவந்து கிடந்தது.


  முகம் வாடிய ரோஜாவாய் சோர்ந்திருந்தது. குழந்தை சொன்ன மாதிரி அவள் சாப்பிடுவது போல் தோன்றவில்லை.

  வெறும் தயிர் சாதம் தான், அதையும் ஸ்பூனால் அளைந்துக் கொண்டிருந்தாள்.

  'ஏன் இவ்வளவு டல்லாகத் தோன்றுகிறாள்? ஒரு வேளை ஏதாவது லவ் ஃபெயிலியராகி இருக்குமோ... யாரையாவது நம்பி ஏமாந்து விட்டாளா... இல்லை... வருகிறேன் என்று சொல்லி விட்டு வரத் தாமதிக்கும் காதலனை எண்ணி அழும் அளவிற்கு மிகவும் பூஞ்சை மனம் கொண்டவளா... எப்படி தெரிந்துக் கொள்வது? முன் பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் சென்று அவள் பிரச்சினையை குறித்துப் பேசுவது நாகரீகமல்ல!' என்று சிந்தித்தான்.

  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு யோசித்திருந்த வேளையில் தான், அவளின் முகமாற்றம் லேசான உறுத்தலை ஏற்படுத்தியது.

  ஒரு ஸ்பூன் தயிர் சாதத்தை வாயருகே கொண்டு சென்றவள், ஏதோ வேதனையில் முகம் சுளித்தாள்.

  அவன் பார்த்திருக்கும் பொழுதே... கையிலிருந்த ஸ்பூனை மீண்டும் கிண்ணத்தில் போட்டு விட்டு வேகமாக இதழ் கடித்தபடி தன் கரங்களில் தலையை தாங்கி கொண்டாள்.

  மூக்கு விரிந்து விழிகள் கலங்கியது, ஏதோ வலியைப் பொறுக்க முடியாமல் கீழுதட்டை பற்களால் அழுத்தியதால்... அந்த இடத்தில் லேசாக இரத்தம் கசிந்தது. அவ்வேதனையை அடக்க முயன்ற அவளின் இம்மாதிரியான செயல்களால், முகமெல்லாம் இரத்தமென சிவந்திருந்தது.

  அவளையே செய்வதறியாத தடுமாற்றுத்துடன், தன் கை முஷ்டிகளை இறுக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன்.

  "அப்பா... அவங்களுக்கு ஏதோ உடம்பு சரியில்லை போலிருக்கு!" என்றாள் குழந்தை.

  "ம்!" என்று தவிப்போடு பதிலளித்தான்.

  அவள் படும் வேதனையைப் பார்க்க பார்க்க ஏனோ அவன் மனம் துடியாய் துடித்தது.

  "அப்பா வாங்க அவங்களிடம் போய் உடம்புக்கு என்ன பிரச்சினை என்று கேட்கலாம்!" என்று அவனை அழைத்தாள்.

  "இல்லைம்மா... முன்பின் தெரியாதவர்களிடம் போய் நாம் பேசினால்... அவர்கள் நம்மை தவறாக எடுத்துக் கொள்வார்கள் இல்லையென்றால் பயந்து விடுவார்கள்... சரியாக பதிலளிக்க மாட்டார்கள்!" என்று அவன் தயங்கினான்.

  "ப்ச்... அப்பா... அதெல்லாம் பார்த்தால் முடியுமாப்பா... பாவம் அவர்கள் வேறு தனியாக இருக்கிறார்கள், கூட யாருமே இல்லை!"

  "ஆமாம்..." என்று அவன் தயக்கத்துடன் இழுக்கும் பொழுதே, அவள் பில் அமௌன்ட்டை பே புக்கில் வைத்து விட்டு எழுந்தாள்.

  "அப்பா... அப்பா... அவங்க போறாங்க பாருங்க. வாங்க நாமும் போகலாம்!" என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்தபடி அவசரப்படுத்தினாள்.

  ஆங்... என்று திகைத்தவன், சரி வேறு வழியில்லை உடல்நிலை சரியில்லாதவள் தனியாக வேறு செல்கிறாளே... என்று தானும் பணத்தை வேகமாக செட்டில் செய்து விட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

  அவள் மெல்ல நடக்க முடியாமல் தடுமாறியபடி நடந்தாள்.

  இவன் வேகமாக அவளை நெருங்கவும், அவள் கார் பார்க்கிங்கில் இவன் காரருகே செல்லவும் சரியாக இருந்தது.

  "ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ!" என்று அழைத்தபடி விரைவாக அவள் முன்னே சென்று நின்றான் ரமணன்.

  அவள் நிமிர்ந்து நெற்றி சுருங்க அவனைப் பார்த்தாள்.

  "ஹாய்!" என்று சிநேகமாக புன்னகைத்தவன், "நான் ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று பதவிசாக கேட்டான்.

  அவன் சொல்லும் மொழி புரியாதவள் போல அவள் திருதிருவென்று விழித்தாள்.

  "என்ன...?" என்று ஒற்றை வார்த்தையில் கேட்கும் பொழுதே ஏற்பட்ட வலியால் லேசாய் முகத்தை சுளித்தபடி ஹேன்ட் பாக்கை கைகளால் இறுகப் பற்றி அதனை சமாளிக்க முயன்றாள்.

  "இல்லை... உங்களுக்கு ஏதாவது ஹெல்த் பிராப்ளமா? நானும் நீங்கள் சாப்பிடும் பொழுதிலிருந்து கவனித்து கொண்டிருக்கிறேன்... ஏதோ ஒரு தாங்க முடியாத வலியில் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கின்றது... தனியாக வேற இருக்கின்றீர்கள்... ஹாஸ்பிட்டல் ஏதும் போக வேண்டுமென்றால் சொல்லுங்கள்... நான் டிராப் பண்ணுகிறேன். இல்லை வழியில் யாராவது பிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் அழைத்துச் செல்ல வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், நாம் அவர்களையும் அழைத்துக் கொள்ளலாம்!" என்றான் அக்கறையாக.

  அவன் பேசுவதையெல்லாம் கேட்டு மிரண்டு விழித்தவள், "இல்லை... இல்லை... அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் பார்த்துக் கொள்கின்றேன், நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்!" என்று அவன் உதவியை ஏற்க மறுத்தாள் அவள்.

  "எனக்கு தொந்தரவு என்று நீங்கள் ஒன்றும் அதெல்லாம் ஃபீல் பண்ணாதீர்கள்... நான் இன்றைக்கு ஃபிரீ தான்!" என்று அவன் கூறவும், கோபத்தில் முகம் சிவந்தாள் அவள்.

  "அதற்கென்று நீங்கள் அழைத்தவுடன், நான் உங்களுடன் வர வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை!" என்று அவனை முறைத்தபடி கூறினாள்.

  "ஹேய்... ஹலோ... உனக்கு உடம்பு முடியவில்லை என்பதால் தான் நான் இவ்வளவு தூரம் கூறுகின்றேன்..." என்றவன் சட்டென்று ஒருமைக்குத் தாவியிருந்தான்,

  "உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி... நீங்கள் போகலாம்!" என்று சொல்லும் பொழுதே ஏற்பட்ட வலியில் மீண்டும் முகத்தை சுளித்தபடி அவன் கார் கதவின் கைப்பிடியை இறுகப் பற்றினாள் அவள்.

  முகம் வேதனையில் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

  அதைக் கண்டதும் அவனுக்கு கோபம் வந்தது, 'என்ன பெண் இவள்... நிற்கவே முடியவில்லை. இன்னும் எங்கே... எப்படி... எவ்வளவு தூரம் போக வேண்டுமோ தெரியவில்லையே தனியாக எப்படி சமாளிப்பாள்?' என்று மனதினுள் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் மெல்ல அவ்விடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள்.

  இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பாள், அடுத்த அடிக்கு காலை நகர்த்த முடியாமல் அவள் தள்ளாட, அவன் வேகமாக அவளைத் தாங்கி பிடித்தான்.

  அவள் கரங்கள் இரண்டும் வலியிலும், வேதனையிலும் சில்லிட்டு இருந்தது.

  சட்டென்று முடிவெடுத்தவன், காரைத் திறந்து அவளை முன் சீட்டில் தள்ளி வேகமாக லாக் செய்தான்.

  ரமணனின் செய்கையால் அதிர்ந்து போனாள் அந்தப் பெண்.

  "ஹேய்... என்ன பண்றீங்க? ஒழுங்காக கதவைத் திறந்து விடுங்கள்... நான் இறங்கிக் கொள்கின்றேன்!" என்று அவனிடம் சொல்லிக் கொண்டே பூட்டியிருந்த கார் கதவின் கைப்பிடியைப் பற்றி மேலும் கீழுமாக பலமாக ஆட்டினாள்.

  ஆனால் அவனால் சென்ட்ரல் லாக் செய்யப்பட்டிருந்த கதவு, அவளின் எந்த முயற்சிக்கும் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

  கோபமாக அவன் புறம் திரும்பினாள்.

  அதற்குள் அவன் காரை ஸ்டார்ட் செய்து ஹோட்டலை விட்டு வெளியே ரோட்டை அடைந்திருந்தான்.

  "மரியாதையாக காரை நிறுத்துங்கள். இல்லை... நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!" என்று சத்தமிட்டபடி ஸ்டீயரிங் வீலில் இருந்த அவன் கரங்களைப் பற்றி வேகமாக இழுத்தாள்.

  திடீரென்று அவள் பிடித்து இழுத்ததால்... சாலையில் சற்று நிலைதடுமாறிய வண்டி, பின் நேராகச் செல்ல ஆரம்பித்தது.

  "ஷ்... ஏய் சும்மா இரு. ஒழுங்காக போக வேண்டிய இடத்திற்கு போக வேண்டாமா? வேறு எங்கேயாவது அனுப்பி விடுவாய் போலிருக்கின்றதே!" என்று அவனும் பதிலுக்கு சத்தமிட்டபடி அவளுடைய இரு கரங்களையும் செயல்பட விடாமல் தன் ஒரு கரத்தால் சேர்த்து இறுகப் பிடித்துக் கொண்டான்.

  அவனுடைய அடுத்தடுத்த செயல்களால் மிரண்டு போனவள், அவனை பயத்தோடு பார்த்தாள்.

  "இங்கே பாருங்கள்... நான் தனியாக சாப்பிட வந்திருப்பதால், எனக்கு யாருமில்லை என்று நினைத்து விடாதீர்கள். என்னை ஏதாவது தொந்தரவு செய்ய நினைத்தீர்கள் என்றால் என் பேமிலியில் இருப்பவர்கள் உங்களை சும்மா விட மாட்டார்கள். அப்புறம் நீங்கள் பயந்து போய் அவர்களிடம் எத்தனை சாரி சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உங்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள், ஆமாம்... அதனால் மரியாதையாக காரை நிறுத்தி என்னை இறக்கி விட்டு விடுங்கள். அப்புறம் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது!" என்று அவனை பயங்கரமாக மிரட்டினாள் அவள்.

  அவளின் மிரட்டலைக் கேட்டவன், ஹஹாவென்று தலையை பின்னால் சாய்த்து சிரித்து விட்டான்.

  இதழ்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் அவனுடைய ஒற்றை கரத்தின் பிடியில் மாட்டிக் கொண்டிருந்த தன் இரு கரங்களையும் விடுவிக்க போராடிக் கொண்டிருந்தவள், அவன் சிரிப்பை கண்டு திகைத்து விழித்தாள்.

  ஆனால் அவனோ அநாயசமாக அவளின் முயற்சிகளை அடக்கியபடி லாவகமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

  அவள் விழிப்பதைக் கண்டவன், இதழ்களில் புன்னகைத் தவழ அவளிடம் திரும்பினான்.

  "என்ன மேடம் விழிக்கின்றீர்கள்... நீங்கள் மிரட்டினால் நாங்கள் பயந்து விடுவோமா... இதோ மீண்டும் நானே கேட்கின்றேன். உன்னுடைய உறவினர்கள் யாரையாவது நம்முடன் அழைத்து கொள்ளலாம், அவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்ற விவரத்தைச் சொல்லு?" என்று அவளிடம் கேள்வியை எழுப்பினான் ரமணன்.

  அவள் எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள், விழிகளில் அப்பட்டமாக மிரட்சி தெரிந்தது.

  அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள்.

  அவள் கரங்கள் இன்னும் அவன் பிடியில் தான் இருந்தது. ஆனால் அதை விலக்கி கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அவனிடமிருந்து முழுவதுமாக எப்படி தப்பிப்பது என்று வேக வேகமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

  அவள் அமைதியாக வரவும், திரும்பி அவளை ஓரப் பார்வை பார்த்தான் ரமணன்.

  அவனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவள் சுழன்று கொண்டிருந்ததால்... தற்காலிகமாக தன் வலியை மறந்திருந்தாள் அவள்.

  அவனுக்கும் அது தான் தேவையாக இருந்தது. ஹாஸ்பிடல் செல்லும் வரை அவள் வலி பொறுக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்தவனுக்கு, தன்னுடன் போராடும் வேகத்தில் அவள் தன் வலியை மறந்திருப்பது நிம்மதியை அளித்தது.

  அதனாலோ என்னவோ... ஹாஸ்பிடல் தான் செல்கின்றோம் என்ற உண்மையைக் கூறாமல் அவளிடம் வழியெல்லாம் வம்பு செய்து கொண்டு வந்தான் அவன்.

  இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியிருக்க, அதுவரை அமைதியாக இருந்த குழந்தை அவனை அழைத்தாள்.

  "இவ்வளவு நேரம் நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுவதைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தேன் நான். அவங்க உங்களைப் பார்த்து ரொம்ப பயப்படறாங்க. நீங்க அவங்களை எங்கேயோ கடத்தி போறீங்கன்னு நினைச்சிட்டாங்க போலிருக்கு!" என்று ஹஹாவென்று சிரித்தாள்.

  "ஹைய்யோ அப்பா! நீங்க அவங்க கண்ணுக்கு வில்லனா ஆயிட்டீங்க..." என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

  அவனுக்கும் அதை நினைத்து சிரிப்பு தான் வந்தது. ஆனால் தனியாக சிரித்தால் அவள் தன்னை தவறாக எடுத்துக் கொள்வாள் என்று எண்ணி அதை அடக்கியவன், இன்னொரு விஷயத்தில் கோட்டை விட்டான்.

  குழந்தை பின்னாலிருந்து அவன் கழுத்தை கட்டி கொண்டு தொடர்ந்து அவனை கேலி செய்து சிரிக்க, "ஷ்... போதும் கொஞ்சம் நேரம் சும்மா இரம்மா!" என்றான் தன்னை மறந்து.

  அருகிலிருந்தவள் திரும்பி அவனை விசித்திரமாக நோக்கவும் சட்டென்று சுதாரித்தவன், "ஹேய்... கொஞ்ச நேரம் கையை ஆட்டாமல் சும்மா வா, இப்படி செய்தால் எப்படி நான் காரை ஓட்டுவது... ம்!" என்று அவளை போலியாக அதட்டினான் ரமணன்.

  அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை... 'என்ன உளறுகின்றான் இவன்? நான் எங்கே கையை ஆட்டினேன். இவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்றல்லவா சிந்தித்து கொண்டிருந்தேன்!' என்று எண்ணி குழம்பினாள்.

  அவளின் குழம்பிய முகத்தை கண்டதும், அவனுக்கு மீண்டும் சிரிப்பு பீறிட்டது.

  'வேண்டாம் ஏற்கனவே எங்கேயோ கடத்தி போகின்றான் என்றெண்ணி பயந்து போயிருக்கின்றாள். இந்நிலையில் சிரித்தால் அவ்வளவு தான், ஐயோ... தன்னை ஏதோ ஒரு பைத்தியம் கடத்தி செல்கின்றதென்று நினைத்து இன்னும் அரண்டு விடுவாள்!' என்று மிக சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினான் ரமணன்.

  -தொடரும்
   
   
 8. star arokia viji

  star arokia viji Wings

  Messages:
  6
  Likes Received:
  4
  Trophy Points:
  63
  Woww......kathai ippa romba swarashyamaa poguthu....super...we want ud fast.....haha...kalakureenga....
   
  deepababu likes this.
   
 9. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  Haha... Thank u so much pa. Ya Weekly twice definetily, bonus ud depends on time. Pls put ur comments on comments thread. :)
   
  star arokia viji likes this.
   
 10. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  #9#
  கார் ஓரிடத்தில் நிற்கவும், அவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று விரல்களால் ஷாலை இறுக்கியபடி சிந்தித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து வெளியே பார்த்தாள்.

  சட்டென்று அவளின் முகம் அதிர்ச்சியை வெளியிட்டது. திரும்பி அவனை மருண்டு பார்த்தவள், வேகமாக காரின் கதவை திறக்க முயற்சித்தாள்.

  ஆனால் அவளால் முடியவில்லை... இயலாமையால் விழிகள் கலங்கி இதழ்கள் துடிக்க நெஞ்சம் விம்மியது.

  அதுவரை கையை கட்டிக் கொண்டு அவளின் முயற்சிகளை பார்த்திருந்த ரமணன், அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கவும் அவளிடம் பேசினான்.

  "ஷ்... இப்பொழுது எதற்கு அழுகின்றாய்?" என்று கேட்டான்.

  "ப்ளீஸ்... என்னை விட்டு விடுங்கள் நான் போய் விடுகின்றேன். நீங்கள் இந்த மாதிரியெல்லாம் செய்தீர்கள் என்று யாரிடமும் பிராமிஸ்ஸாக கூற மாட்டேன்!" என்றாள் அழுகை குரலில்.

  முகத்தில் குறும்பு தாண்டவமாட, "அப்படியா... சரி எங்கே போவாய்?" என்று அப்பாவியாய் கேட்டான்.

  "ஹா... வீட்டிற்கு!" என்று அவசரமாக கூறினாள்.

  அவள் வேறு ஏதோ சொல்ல வந்து வேகமாக மாற்றியதை கவனித்தவன், அவள் விழிகளை கூர்ந்து பார்த்தான்.

  அவன் பார்த்த பார்வையில் அவள் முகத்தில் பதற்றம் தொற்றி கொண்டது. அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்காமல் விழிகளை தாழ்த்திக் கொண்டவள், தன் மடியில் இருந்த ஹேண்ட் பேகை இறுக பற்றிக் கொண்டாள்.

  தன்னிடம் எதையோ மறைப்பதால் தான் அவளிடம் இந்த தடுமாற்றம் என்பதை புரிந்து கொண்டவன், தற்காலிகமாக அந்த ஆராய்ச்சியை ஒத்தி வைத்து விட்டு அவளின் உடல்நிலையை முதலில் கவனிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

  "சரி இறங்கு... வா உள்ளே போய் டாக்டரை பார்க்கலாம்!" என்று கதவைத் திறக்க போனான்.

  "இல்லை மாட்டேன்... நான் உங்களுடன் எங்கேயும் வர மாட்டேன்!" என்று வர மறுத்தாள் அவள்.

  "ஹேய்... நீ வலியில் துடித்து கொண்டே என்னுடன் வர மறுத்ததால் தான் உன்னை சும்மா பயமுறுத்தினேன் ஓகே. உன் ஹெல்த்தை செக் பண்ண தான் இங்கே ஹாஸ்பிடல் வந்திருக்கின்றோம்... வேறொன்றுமில்லை பயப்படாமல் இறங்கி வா!" என்று அவளை வற்புறுத்தினான்.

  "நான் உங்களை நம்ப மாட்டேன்... நீங்கள் பொய் சொல்கிறீர்கள். என்னை உள்ளே அழைத்துச் சென்று என்னவோ செய்ய பார்க்கறீர்கள்!" என்றாள் விழிகளில் அச்சத்துடன்.

  ஒருபுறம் அவளை நினைத்து கோபம் வந்தாலும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது அவனுக்கு. இன்று இந்த நாட்டு பெண்களின் நிலை இது தானே... இவள் என்ன செய்வாள்?

  தனியாக செல்வது தான் பாதுகாப்பில்லை என்றால்... அறிந்தவர், அறியாதவர் யாருடனும் வெளியே தனியாக செல்வதும் பாதுகாப்பில்லை. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று அக்கம்பக்கத்தவர் முதற் கொண்டு உறவினர் வரை யாரை நம்பவும் பயமாக இருக்கிறது பெண்களுக்கும், பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கும் என்றெண்ணி வருத்தமாக இருந்தது.

  அவள் அவனையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஆழ்ந்த மூச்செடுத்து நிதானமாக வெளியிட்டவன், அவள் கண்களை நேருக்கு நேர் நோக்கினான்.

  "இங்கே பார்! நான் சொல்வதை அமைதியாக கேள். நீ நினைப்பது போல் உன்னை எதற்காகவும் நான் கடத்தவில்லை, தனியாக அமர்ந்து சாப்பிடக் கூட முடியாமல் ஏதோ ஒரு வலியில் நீ அவஸ்தப்பட்டு கொண்டிருந்ததை பார்த்ததால் தான்... உனக்கு உதவ முன் வந்தேன். அதே போல் வேலை வெட்டியில்லாமல் எந்த பெண் தனியாக மாட்டுவாள் அவளிடம் வம்பிழுக்கலாம் என்று அலைபவனும் நான் இல்லை. சொஸைட்டியில் மரியாதைக்குரிய இடத்தில் இருப்பவன் நான், என் பெயர் ரமணன். இதோ பார்... இது என்னுடைய கார்ட்!" என்று அவள் கையில் தன் கார்டை திணித்தான்.

  அதை நெற்றி சுருங்க பார்வையிட்டவள், "இந்த கார்டுக்குரியவர் நீங்கள் தான் என்று... எப்படி நான் நம்புவது?" என்றாள் சந்தேகமாக.

  "தேவை தான் எனக்கு..." என்று அலுத்துக் கொண்டவன், அவனுடைய டிரைவிங் லைசன்ஸ் ஐடியை எடுத்து காண்பித்தான்.

  "போதுமா... இல்லை ஆதார் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐ.டி எல்லாம் வேண்டுமா?" என்றான் நக்கலாக.

  "இல்லை... இல்லை அதெல்லாம் வேண்டாம். ஆனால்..." என்று அவள் சந்தேகத்துடன் இழுக்கவும்,

  "ப்ச்... இன்னும் என்ன?" என்றான் சலிப்புடன்.

  "இல்லை... ஒரு பெரிய கம்பெனிக்கு ஓனர் என்றால் மட்டும் நீங்கள் மிகவும் நல்லவராகி விடுவீர்களா? உங்களை மாதிரி எத்தனை பணக்காரர்கள் தப்பு செய்து விட்டு கோர்ட் கேஸ் என்று அலைந்து இறுதியில் பணம் கொடுத்து அந்த தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறீர்கள்?" என்றாள் கேள்வியாக.

  "அம்மா... தாயே... ஒட்டு மொத்த பணக்காரர்களும் நல்லவர்கள் என்று நான் வாதாட வரவில்லை. என்னை பொறுத்த வரை நான் நல்லவன், என் மனசாட்சியின் சொல் கேட்டு நடப்பவன்!" என்றான் அழுத்தமாக.

  "அதை தான் நான் எப்படி நம்புவது?" என்று அவள் மீண்டும் கண்களில் சந்தேகத்துடன் வினவ, ரமணன் கடுப்பின் உச்சத்திற்கே சென்றான்.

  "அப்படியே ஓங்கி ஓர் அறை விட்டேன் என்று வைத்துக் கொள்... வாயிலிருக்கும் பல் முப்பத்தியிரண்டும் கொட்டி விடும் ஜாக்கிரதை... பாவம் சின்ன பெண் தனியாக உடல் வலியில் சிரமப்படுகிறாளே என்று உதவ வந்தால்... குறுக்கு விசாரணையா நடத்திக் கொண்டிருக்கிறாய்? உன் நம்பிக்கைக்கும், பாதுகாப்புக்கும் உறவினர் யாரையாவது கூப்பிட்டுக் கொள்ளலாம் விவரம் சொல்லு என்றால் அதையும் சொல்லாமல், நல்ல வக்கணையாக வாய் கிழிய பேசுகிறாய் நீ...?" என்றான் அவளை முறைத்தபடி.

  அவள் முகத்தில் சற்று முன்பிருந்த சந்தேகம் மறைந்து மீண்டும் பயம் வந்து அப்பிக் கொண்டது.

  "ப்ச்... அப்பா! ரொம்ப மிரட்டாதீங்க... பாவம் அவங்க பயப்படறாங்க..." என்று அவளுக்கு பரிந்து வந்தாள் குழந்தை.

  "நீ சும்மா இரு... உனக்கு ஒன்றும் தெரியாது. எவ்வளவு நேரமாக அந்த வலியை தாங்கி கொண்டு பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்கிறாள் பார். நாம் இவளுக்காக பார்த்தால்... இவள் நம்மையே சந்தேகப்படுகின்றாள். சரி போகட்டும் காலம் அப்படி இருக்கிறது என்று பொறுத்துப் போனால், என்னை மிகவும் சோதிக்கின்றாள்!" என்று உணர்ச்சி வேகத்தில் அவன் பின்னால் திரும்பி அக்குழந்தையிடம் நியாயம் பேச ஆரம்பித்தான்.

  அதுவரை அவனை லேசான அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் இதயம், யாருமில்லாத பின் புறத்தை பார்த்து அவன் தனியாக பேச ஆரம்பிக்கவும்... மத்தளம் கொண்டு அடிப்பது போல் துடிக்க ஆரம்பித்தது.

  விழிகள் தன் முழு அளவுக்கு பெரியதாக விரிய அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் அவள்.

  "அச்சோ... அப்பா! அவங்க உங்களை எப்படி பார்க்கிறாங்கன்னு பாருங்க!" என்றாள் குழந்தை.

  "ஏன்... எப்படி பார்க்கின்றாள்?" என்று கேட்டபடி அவளைத் திரும்பி பார்த்தான் ரமணன்.

  அவளோ கண்களை விரித்து அவனையே மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

  நெற்றியை சுருக்கியவன், "என்ன?" என்றான்.

  "நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள் பீதியோடு.

  "ஏன் இவளிடம் தான்... ம்..." என்று பதில் சொல்ல ஆரம்பித்தவன், ஷ்... என்றபடி நாக்கை கடித்தான், அவளின் நிலைமை அவனுக்கு தெளிவாக புரிய ஆரம்பித்தது.

  அவளைப் பொறுத்தவரையில் யாருமில்லாத பின்புறத்தைப் பார்த்து அவன் தனியாக பித்தன் போல பேசிக் கொண்டிருக்கின்றான்.

  இதழ் கடித்து ஒரு கணம் அமைதியாக இருந்தவன், இந்த வழியில் முயற்சித்தால் என்ன... என்று யோசித்தான்.

  'எப்படி முயன்றாலும் அது அதற்கு பதில் பேசி உள்ளே சிகிச்சைக்கு வர மறுக்கும் இவளை, இந்த வழியில் தான் அழைத்துச் செல்ல வேண்டும்!' என்று முடிவு செய்தவன் நிமிர்ந்து அவளை நோக்க, அவன் முகத்தையே வைத்த விழி எடுக்காமல் ஆராய்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

  அவளின் குழந்தைப் போன்ற முகத்தை கண்டதும், அவன் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது... அவளை அப்படியே தன்னோடு இழுத்தணைத்து முத்தமிட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

  ஒரு கணம் திடுக்கிட்டவன், தலையை உலுக்கி தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றான்.

  இதுவரையில் யாரிடமும் தோன்றாத உணர்வு, அவளைக் கண்டதும் தோன்ற... அவன் உடல் தகிக்க ஆரம்பித்தது.

  'இவள் தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற பெண்ணா? ஏன் என் மனம் இவளிடம் இப்படி அலைப்பாய்கின்றது? இவளை எப்படி நான் அப்படியெல்லாம் நினைத்தேன்?' என்று குழம்பியவன்,

  'ஆனால்... இவள் யார் என்னவென்று எந்த விவரமும் சொல்ல மறுக்கின்றாளே...? என்னை இவள் மனதார ஏற்றுக் கொள்வாளா?' என்றெண்ணி ஏங்க ஆரம்பித்தான் ரமணன்.

  அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், "என்ன?" என்றாள் அவனிடம் தயங்கியபடி.

  சட்டென்று தன்னை சுதாரித்தவன், தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான்.

  "ம்... ஓகே குட்டிம்மா! உன்னை பற்றி சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. சாரிடா... இது எதற்கு என்று உன்னிடம் பிறகு சொல்கின்றேன்!" என்றவன் அவளிடம் திரும்பினான்.

  "நான் பின் சீட்டில் இருக்கும் ஆவியிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன்!" என்றான் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்.

  "எ... எ... என்ன... ஆ... ஆவியா?" என்று மீண்டும் கண்களை அகல விரித்தவள், "இ... இல்லை... நீங்கள் பொய் சொல்கிறீர்கள். என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள்..." என்றாள் வேகமாக, ஆனால் அதற்கு நேர்மாறாக அவளின் முகம் பயத்தை தத்தெடுத்து இருந்தது.

  "ம்ஹும்... நீ நம்பினால் நம்பு, இல்லையென்றால் போ... அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இப்பொழுது நீ இறங்கி உள்ளே வருகிறாயா... இல்லையா?" என்று முடிவாக கேட்டான்.

  அவள் யோசனையிலேயே இருக்கவும், "சரி... நீ இங்கேயே காருக்குள்ளேயே உட்கார்ந்திரு. நான் சென்று வருகிறேன்!" என இறங்க முயன்றான்.

  "இல்லையில்லை... இல்லை..." என்று வேகமாக அவனை நெருங்கி அமர்ந்தவள், பின் சீட்டை திகிலோடு திரும்பி பார்த்தாள்.

  பிறகு அவன் கரங்களை கெட்டியாகப் பிடித்து கொண்டு, "நானும் உங்களோடு உள்ளே வருகின்றேன்!" என்றாள் மெல்லிய குரலில்.

  அவள் விழிகள் மிரட்சியோடு காருக்குள் அலைப்பாய்வதை கண்டவனின் மனம் கனிந்தது.

  "சரி... ஆனால் ஒரு கண்டிஷன்!"

  "என்ன?" என்று நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கினாள்.

  அவள் விழிகளை பார்த்தவனுக்கு, அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தியபடி அந்த கண்களுக்குள் நேரடியாக பேச வேண்டும் என்று ஆவலாக இருந்தது.

  அப்பா... என்ன கண்ணுடா இது? அப்படியே ஆளை மயக்குகிறாள்... அவள் முகத்தையே அவன் ஆர்வத்துடன் பார்த்திருக்க,

  "அப்பா! என்னப்பா செய்யறீங்க ஒன்றும் பேசாமல்...?" என்று அவன் தோளைப் பற்றி உலுக்கினாள் சின்னவள்.

  சட்டென்று திகைத்தவன், சொல்வதறியாது தடுமாறினான்.

  "ஆங்... அது... அது வந்து... அவளிடம் என்ன சொல்லலாம்... என்று யோசித்து கொண்டிருந்தேன்!" என்று ஒருவழியாக அவளை சமாளித்தான்.

  "ஓ!" என்று அமைதியானாள் குழந்தை.

  நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ அவன் பேசிக் கொண்டிருந்த திசையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

  "ஏய்... இங்கே பார்!" என்று அவன் கூறவும், அவனிடம் திரும்பினாள் அவள்.

  அதற்குள் அவனுடைய விழிகள் அவள் கரங்கள் மேல் சென்று நிலைத்தது. அவள் கரம் இன்னும் அவன் கரத்தைக் கெட்டியாக பிடித்து கொண்டு தான் இருந்தது.

  அந்த கரத்தை மென்மையாக வருட வேண்டும் என்று எழுந்த ஆவலை தலையில் தட்டி அடக்கினான்.

  'இப்பொழுது தான் மகளிடம் மாட்டினாய்... அடுத்து இவளிடமும் மாட்டிக் கொண்டு விழிக்காதே...' என்று தன்னையே எச்சரித்தான்.

  லேசாக தொண்டையை செறுமியவன், "உன் பெயரென்ன?" என்று சம்பந்தமில்லாமல் திடீரென்று கேட்டான்.

  அவளுக்கோ அவனை பார்க்க பார்க்க குழப்பமாக இருந்தது. இவன் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றான்...

  'ஒரு நேரம் மிரட்டுகிறான்... ஒரு நேரமோ தனியாக பேசுகிறான்... கேட்டால் ஆவி என்கிறான். அடுத்த நிமிடம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பேசுகிறான். இவனுக்கு என்ன தான் பிரச்சினை? முதலில் இவனை தான் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் போலிருக்கிறது!' என்று நினைத்தாள் அவள்.

  "ஏய்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்... என்னை ஏன் அப்படி பார்க்கின்றாய்?" என்று அதட்டினான்.

  "இல்லை... நீங்கள் முதலில் ஏதோ கண்டிஷன் என்று தானே சொன்னீர்கள். அப்புறம் அதை சொல்லாமல் ஏன் திடீரென்று என் பெயரை கேட்டீர்கள்?" என்று அவனை வினவினாள்.

  'ஓ! அப்படியா சொன்னேன்...' என்று உள்ளுக்குள்ளே திகைத்தவன், அதை வெளிக்காட்டாமல் சமாளித்தான்.

  "எவ்வளவு நேரம் தான் உன்னை ஏய்... ஏய் என்று அழைப்பது. அதனால் தான் பெயரை கேட்டேன்!" என்றான் அலட்சியமாக.

  "நீயும் கேட்டவுடனே அப்படியே கடகடவென்று ஒப்பித்து விடுகிறாய் பார். பெயர் கேட்டால் சொல்வதற்கு கூட இத்தனை யோசனை..." என்றவன் வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

  "ஆனால் உன்னை பார்க்க பார்க்க நீ எதையோ மறைப்பது போல் எனக்கு தோன்றுகிறது. எங்கேயாவது... ஏதாவது தப்பு செய்து விட்டு அவர்களுக்கு தெரியாமல் இங்கே வந்து மறைந்து வாழ்கின்றாயா?" என்றதும் அவள் முகம் பேயறைந்த மாதிரி மாறியது.

  "அய்யோ... அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் எந்த தப்பும் செய்யவில்லை!" என்று வேகமாக பதட்டத்துடன் மறுத்தவளின் விழிகள் கலங்கியது.

  -தொடரும்
   
   

Share This Page