Sponsored

Deepababu's "Chinna Chinna Poove" - Story Thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by deepababu, Feb 11, 2017.

 1. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  #10#
  "உஷ்... இப்பொழுது எதற்கு அழுகிறாய்? நான் சும்மா கிண்டல் செய்தேன்... வா!" என்று கதவின் பிடியில் கை வைத்தவனை அவள் மீண்டும் தடுத்தாள்.

  "உஃப்... மறுபடியும் என்ன?" என்றான் ரமணன் இழுத்து பிடித்த பொறுமையுடன், ஏற்கனவே அவளை அழ வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி வேறு.

  "வந்து... என் பெயர் நந்தினி!" என்றாள் மெல்லிய குரலில்.

  'வாவ்! ச்சோ... ஸ்வீட்...' என்று அவள் நாடியைப் பிடித்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றிய உணர்வை சிரமப்பட்டு அடக்கியவன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

  "நைஸ் நேம்!"

  அவள் விழிகள் தயக்கத்துடன் தழைய, 'ஹப்பா! பெண்கள் மனதில் வெட்கம் தோன்றி விட்டால்... உடல் வலி என்ன... ஆவியென்ன... பேயென்ன...? எதுவும் நினைவில் நிற்காது போலிருக்கிறது' என்றெண்ணியவன், 'அம்மாவுடனும், பெண்ணுடனும் பேசிப் பழகினால் சைக்காலஜியில் டிகிரி எதுவும் படிக்காமலேயே பெரிய தத்துவ மேதை ஆகி விடுவேன்!' என்று மனதினுள் புன்னகைத்தான்.

  கீழே இறங்கியவன் அவள் புறம் வந்து கதவை திறக்க எண்ணி திரும்ப, அவள் அவனருகே நின்று கொண்டிருந்தாள். அவள் வேகம் கண்டு அவன் விழிகள் வியப்பில் விரிந்தது.

  எதுவும் பேசாமல் அவளிடம் உடன் வருமாறு தலையசைத்தபடி நடக்க ஆரம்பித்தான் ரமணன்.

  நந்தினியோ பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்தாள்.

  'யாரைத் தேடுகிறாள் இவள்?' என்று நெற்றியைச் சுருக்கியவன், "எதற்கு பின்னால் திரும்பி திரும்பி பார்க்கிறாய்?" என்று அவளிடமே வினவினான்.

  "இல்லை... ஆவி அது இது என்று பொய் தானே சொன்னீர்கள்... இந்த காஷ்மோரா படத்தில் கார்த்தி ஏதேதோ டிரிக் செய்து மக்களை ஆவி, பேய் என்று ஏமாற்றுவானே... அந்த மாதிரி தானே உங்கள் சொல்படி கேட்க வேண்டும் என்பதற்காக என்னை பயமுறுத்தி ஏமாற்றுகிறீர்கள்?" என்றாள் அவன் முகத்தை ஆராய்ந்தபடியே சந்தேகமாக.

  அவள் பேச பேச அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை... ஆனால் சுற்றுப்புறத்தை உணர்ந்து தன்னை அடக்கியவன், அவளுக்கு பதிலளிக்க முயன்றான்.

  அந்தோ பரிதாபம்... அவனையும் மீறி அவனிடமிருந்து மீண்டும் சிரிப்பு வெடித்துக் கொண்டு கிளம்பியது.

  "ஓ காட்!" என்று கைகள் கொண்டு முகத்தை மூடியபடி சற்று நேரம் நின்றான்.

  அவன் தன் கரங்களை விலக்க, முகம் சிவந்து விழிகள் கலங்கியிருந்தது.

  'விழிகளில் நீர் தேங்கும் அளவுக்கு என் வாழ்வில் நான் சிரித்ததே இல்லை... மை காட்! என் வாழ்வை ஆனந்தமுடையதாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பினாயா... தேங்க் யூ ஸோ மச்! காலம் முழுக்க இவர்கள் இருவரும் என்னுடனையே இருக்க வேண்டும்!' என்று பிரார்த்தித்தபடி அவளிடம் திரும்பினான் ரமணன்.

  நந்தினி அவனையே விசித்திரமாக பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.

  அவளைப் பார்த்து புன்னகைத்தவன், "எப்படி இப்படியெல்லாம்? நீ எப்பவுமே இப்படித்தானா... இல்லை என்னிடம் தனியாக மாட்டிக் கொண்டோமே என்ற பயத்தில் இப்படி பேசுகிறாயா?" என்று கண்களில் குறும்புடன் இதழ்கள் துடிக்க வினவினான்.

  அவள் எதுவும் பேசாமல் அவனையே கேள்வியோடு விழிகள் இடுங்க நோக்கினாள்.

  "ஓகே! உன் டவுட்டை இப்பொழுதே கிளியர் பண்றேன் நான்..." என்று இழுத்தவாறு யோசனையோடு சுற்றும்முற்றும் பார்வையிட்டான்.

  "சரி இங்கே நிறைய பூச்செடி இருக்கிறது இல்லை... உனக்கு என்ன கலர் பூ வேண்டும் என்று சொல்லு?" என கேட்டான்.

  "எதற்கு? எனக்கு எதுவும் வேண்டாம்!" என்று மறுத்தாள் அவள்.

  "ஹலோ மேடம்! நான் ஒன்றும் உங்களுக்கு ஆசையாக பூப்பறித்து தருகிறேன் என்று சொல்லவில்லை. என்னுடன் இருக்கும் ஆவி சென்று நீ சொல்லும் பூவை பறித்து வரும்!" என்று அவன் கூலாக சொல்ல, அவள் மிரண்டு அவனை நெருங்கி நின்றாள்.

  "இ... இல்லை... இல்லை, வேண்டாம்... வேண்டாம். நான் உங்களை நம்புகிறேன், நாம் உள்ளே போகலாம்!" என்று திக்கி திணறினாள் அவனிடம்.

  "அதெல்லாம் முடியாது... நீ என்னை சந்தேகப்பட்டு விட்டாய். அதனால் நீ சொல்லி தான் ஆக வேண்டும்!" என்று அடம்பிடித்தான் அவன்.

  ப்ச்... என்று மனதினுள் சலித்தவள், சற்று தூரத்தில் தெரிந்த மெரூன் கலர் பூ ஒன்றை குறிப்பிட்டாள்.

  "ஓகேடா குட்டிம்மா... நீ சென்று அவர்கள் சொன்ன பூவை பறித்து வா!" என்று குழந்தையிடம் கூறினான்.

  நந்தினி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த செடியிலிருந்து அவள் குறிப்பிட்ட பூ காம்போடு உடைந்து காற்றில் அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது.

  அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, நடுங்கும் கரத்தால் ரமணனை இறுகப் பற்றியபடி அவனோடு ஒண்டி நின்றாள்.

  அந்த பூ அவள் முன்னால் வந்து நீண்டது, அவள் பயத்தில் கண்களை இறுக்க மூடி அவன் பக்கவாட்டுத் தோளின் கீழ் முகத்தை அழுத்தி மறைத்துக் கொண்டாள்.

  "ஹேய்! பூவை வாங்கி கொள்!" என்றான் ரமணன்.

  "ம்ஹுஹும்... மாட்டேன். இல்லை... எனக்கு வேண்டாம். நான் உங்களை நம்புகிறேன். ப்ளீஸ்... எனக்கு பயமாக இருக்கிறது!" என்று மேலும் அவன் கரத்தை இறுக்கி கொண்டாள், உடல் முழுவதும் நடுங்கி கொண்டிருந்தது.

  "உஷ்... பயப்படாதே... அது நல்ல ஆன்மா உன்னை ஒன்றும் செய்யாது. பூவை வாங்கி கொள், அவள் ஆசையாக பறித்து வந்திருக்கிறாள் இல்லை..." என்றான் மென்மையாக, அவளைத் தன்னிடமிருந்து மெல்ல விலக்கியபடி.

  அவள் விழிகளில் அச்சத்துடன் அவன் முகத்தை அண்ணார்ந்துப் பார்த்தாள்.

  அவளைக் குனிந்து நோக்கியவன், விழிகளில் கனிவு பொங்க வாங்கி கொள் என்று கூறினான்.

  அவள் ஒரு கரத்தால் அவனை இறுகப் பிடித்துக் கொண்டே, மறுகரத்தால் நடுங்கியபடி அந்த பூவை வாங்கினாள்.

  "என்னப்பா... என்னைப் பார்த்து இவங்க இப்படி பயப்படறாங்க?" என்றாள் குட்டிபப்பு ஏக வருத்தத்துடன்.

  "இல்லைடா செல்லம்... உன்னைப் பற்றி அவர்களுக்கு தெரியாது இல்லையா? நீ அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் ரொம்ப பயப்படறாங்க!" என்றான் அவளுக்கு சமாதானமாக.

  "சரி இதைப்பற்றி நாம் மூவரும் பிறகு தனியாக பேசிக் கொள்ளலாம். முதலில் டாக்டரை பார்த்து விடலாம், ஏற்கனவே ஒரு மணி நேரம் வீணாகி விட்டது. உனக்கும் தான் சொல்கிறேன்... இதைப் பற்றி யார் முன்னிலையிலும் எந்த கேள்வியையும் கேட்காதே என்ன?" என்றவுடன், நந்தினியும் சம்மதமாக தலையாட்டினாள்.

  ரமணன் ரிசப்ஷனில் தன் கார்டை காண்பித்தான்.

  "ஓ சார்! மேடம் ஜஸ்ட் இப்பொழுது தான் இன்பார்ம் செய்தார்கள்..." என்றாள் ரிசப்ஷனிஸ்ட் வியப்புடன்.

  "ஹஹா... நோ பிராப்ளம். நான் பார்கிங்கில் இருந்து தான் அவர்களுக்கு இன்பார்ம் செய்தேன். ஆன்ட்டி ஃபிரியா இருக்கிறார்களா?"

  "எஸ் சார்! சசி... சாரை மேடமிடம் அழைத்துச் செல்!" என்று அவர்களை கடந்து சென்று கொண்டிருந்த ஒரு நர்சை அழைத்து கூறினாள்.

  "தேங்க் யூ!" என்று அவளிடம் புன்னகைத்தவன், நந்தினியை அழைத்துக் கொண்டு அந்த நர்சை பின் தொடர்ந்தான்.

  கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்த அவள், "மேடம்! உங்களை பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்..." என்றாள்.

  அவள் பின்னே உள்ளே நுழைந்தவனை கண்டதும், "ஹேய் ரமணா! வா வா... உன்னை பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது..." என்று உற்சாகமாக வரவேற்றார் தமயந்தி.

  "அதுவரை என் உடல் எந்த வித தொந்தரவும் இல்லாமல் நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் ஆன்ட்டி!" என்றான் அவன் விரிந்த புன்னகையுடன்.

  அவனை வியப்போடு பார்த்தார் அவர். ரமணனுடைய சிறு வயதிலிருந்தே அவர்களுடைய குடும்ப டாக்டருக்கான அவருக்கு அவனைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரியும்.

  எவ்வளவு நாட்களாயிற்று... இவனை இப்படி பார்த்து என்று மனதினுள் நெகிழ்ந்தவர், அப்பொழுது தான் அவனுடன் இருந்த நந்தினியை கவனித்தார்.

  "இந்த பெண்..." என்று இழுத்தவாறே அவரின் பார்வை அவர்களின் இணைந்திருந்த கரங்களின் மேல் விழுந்தது.

  அதுவரை சுய உணர்வின்றி ஆவியை நினைத்து பயத்திலிருந்த நந்தினி, அப்பொழுது தான் அவன் கரத்தை இன்னும் தான் இறுக்கிப் பிடித்து கொண்டிருப்பதை உணர்ந்தாள் அவள்.

  வேகமாகத் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டவளின் முகம் பதட்டத்தில் லேசாக சிவந்தது.

  "ம்... இவள்..." என்று இழுத்தபடி சற்று இடைவெளி விட்டவன், "என் பிரெண்ட்!" என்றான் நிதானமாக.

  "ஓ!" என்றவளை ஆராய்ச்சி கண்ணோடு நோக்கியவர், "உனக்கு கேர்ள் பிரெண்டெல்லாம் இருக்கிறார்களா... உலக அதிசயமாக இல்லை இருக்கிறது!" என்றார் கேலியாக.

  'கேர்ள் பிரெண்ட் மட்டுமா... பேய் பிரெண்ட் கூட இருக்கிறது!' என்று வாய்க்குள்ளேயே முனங்கினாள் நந்தினி.

  அருகில் அமர்ந்திருந்த ரமணனின் காதுகளில் அவள் முனகியது தெளிவாக விழுந்து இதழ்களில் புன்னகையை அரும்பச் செய்தது.

  அவனின் மலர்ந்த முகத்தை திருப்தியுடன் பார்த்தவர், "சொல்லுப்பா... என்ன விஷயம்? ஏதாவது என்னுடைய ஹெல்ப் வேண்டுமா?" என்று அக்கறையாக வினவினார்.

  "ஆமாம் ஆன்ட்டி... இவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை, அதற்கு தான் அழைத்து வந்தேன்!" என்றான்.

  "ஓ! இங்கே வந்து உட்காரம்மா. உன் பெயரென்ன?" என்று வினவியவாறு தன் அருகிலிருந்த ஸ்டூலை காண்பித்தார் தமயந்தி.

  "நந்தினி!" என்றவாறு ஸ்டூலில் அமர்ந்தாள்.

  "ம்... என்ன செய்கிறது உடம்பு?"

  "வயிற்று வலி..." என்றாள் தயக்கத்துடன்.

  "ஓ... இப்பொழுது எதுவும் உனக்கு பீரியட்ஸ் டைம்மா?"

  அவன் முன் பதில் சொல்ல தயங்கி அவள் முகம் கூச்சத்தில் சிவந்தது.

  "எனக்கு ஒரு முக்கியமான போன் கால் பண்ண வேண்டும்... நான் வெளியில் இருக்கிறேன்!" என்று அவர்கள் பதிலை எதிர்பாராமல் வெளியேறினான் ரமணன்.

  "நைஸ் பாய்!" என்று மெச்சியவர் அவளிடம் திரும்பினார்.

  நந்தினியின் மனமும் அவனிடம் இளகி இருந்தது.

  வெளியில் அமர்ந்து சும்மா போனை நோண்டி கொண்டிருந்தவனை அழைத்தாள் குழந்தை.

  "என்னப்பா யாருக்கோ போன் பண்ணனும்னு சொன்னீங்க!"

  "அது வெளியில் வருவதற்காக சும்மா சொன்னேன்!"

  "ஏன்?"

  "ஏனென்றால்... அவர்கள் லேடிஸ் ஃபிரியாக பேசுவார்கள். சரி இதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இரு... வீட்டில் பேசிக் கொள்ளலாம். மற்றவர்கள் திரும்பி பார்ப்பார்கள்!" என்று தற்காலிகமாக அவள் கேள்விக்கு அணை போட்டான்.

  சற்று நேரத்தில் நர்ஸ் ஒருவர் வந்து அவனை உள்ளே அழைத்தார்.

  "ஆங்... ரமணன் நந்தினியிடம் பேசியதில் அபென்டிசைஸாக இருக்குமோ என்று சந்தேகமாக உள்ளது. அடிக்கடி வயிற்று வலி வருவதாக கூறுகிறாள். ஒரு ஸ்கேன் செய்தால் தெளிவாக தெரிந்து விடும். அது தான் என்று கன்பார்ம் ஆகி விட்டால்... ஒரு நாள் அட்மிஷன் போட்டு லேப்ரோஸ்கோபிக் செய்து அதை ரிமூவ் செய்து விட்டால் சரியாகி விடும். என்ன செய்யலாம்?" என்றார் மருத்துவர் அவனிடம்.

  அவன் அவள் முகத்தை பார்க்க, அவள் மருட்சியோடு ஷாலை கரங்களில் இறுக பற்றியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

  மெலிதான பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், "நான் நந்தினியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் ஆன்ட்டி!" என்றான்.

  அவர் சரி என்று சம்மதித்து விடைக் கொடுத்தார்.

  அவன் அவளைப் பார்த்து தலையசைக்க, அவள் எழுந்து அவனுடன் நடந்தாள்.

  "ஏதாவது குடிக்கின்றாயா? இங்கே காண்டினில் காபி, டீ நன்றாக இருக்கும்!" என்று அவளிடம் கேட்டான்.

  "இல்லை... எனக்கு எதுவும் வேண்டாம்..." என்றவளின் முகம் வாடி இருந்தது.

  "ஏன்... மதியமும் நீ சரியாக சாப்பிடவே இல்லையே...!" என்றதும் அவள் விழிகளில் நீர் பெருகி வழிந்தது.

  "ஷ்... ஏய்..." என்றவன் அவள் கரம் பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக காருக்கு வந்தான்.

  "ம்... சொல்லு. இப்பொழுது எதற்கு அழுகிறாய்? ரொம்ப வயிறு வலிக்கிறதா?" என்றான் கவலையுடன்.

  "இல்லை... இன்ஜெக்ஷன் போடவும் பரவாயில்லை..." என்று குரல் பிசிற கூறியவள், அவனை விழிகளில் கெஞ்சலுடன் ஏறிட்டாள்.

  "ப்ளீஸ்... என்னை விட்டு விடுங்களேன், நான் போகிறேன்!" என்றாள் நந்தினி அவனிடம்.

  அவளை அதிர்ச்சியோடு ஏறிட்டான் அவன்.

  "ஏன்... ஏன் அப்படி சொல்கிறாய்? நான் தான் உன்னை எதுவும் செய்யவில்லையே... டாக்டரிடம் தானே அழைத்து வந்தேன். இன்னும் ஏன் என்னை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று டென்ஷனாக அவள் தோளைப் பற்றி உலுக்கினான்.

  அவளை விட்டு பிரிய வேண்டும் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு மணி நேரமாக அவளைத் தன் மனைவியாகவும், குழந்தையை தன் மகளாகவும் உரிமையாக எண்ணி இருந்தவன், அவள் சொல்வதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறினான்.

  'நோ... இவள் என்னை விட்டு எங்கும் போக விடமாட்டேன்... இவளும், குழந்தையும் என்றும் என்னுடன் தான் இருக்க வேண்டும்... நான் எதற்காகவும் இவர்களை விட்டு கொடுக்க மாட்டேன்!' என்று பைத்தியம் பிடித்தது போல் மனதில் புலம்ப ஆரம்பித்தான்.

  -தொடரும்
   
   
 2. star arokia viji

  star arokia viji Wings

  Messages:
  6
  Likes Received:
  4
  Trophy Points:
  63
  over over over o over haha...
   
  deepababu likes this.
   
 3. sandy_8320

  sandy_8320 Wings

  Messages:
  1
  Likes Received:
  14
  Trophy Points:
  23
  waiting for ur update :(
   
  star arokia viji and deepababu like this.
   
 4. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  Haha... ;););)
   
  star arokia viji likes this.
   
 5. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  Sure ma.. Due my other works its getting late. Within half an hr, i will update. Thank u so much for ur interest... :)
   
  star arokia viji and Tamil.s like this.
   
 6. deepababu

  deepababu Bronze Wings New wings LW WRITER

  Messages:
  74
  Likes Received:
  192
  Trophy Points:
  113
  #11#
  ரமணன் உரிமையோடு அவள் தோளைப் பற்றி உலுக்கியபடி பேசவும் நந்தினி திகைத்தாள்.

  'என்ன ஆயிற்று இவருக்கு? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்? யார் என்று தெரியாத எனக்காக ஏன் இவர் இவ்வளவு கவலைக் கொள்கிறார்...' என்று குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

  அவள் முகத்தில் குழப்பத்தைக் கண்டவனுக்கு நிதர்சனம் உறைத்தது. 'எந்த உரிமையில் அவளைப் போக விடாமல் நாம் தடுக்கின்றோம்? அதற்காக... அவளை என்னால் எங்கும் தனியே அனுப்ப முடியாது. அவளின் நலன் என் உயிரை விட எனக்கு மிகவும் முக்கியம்!' என தீவிரமாக விரல்களை அழுத்தியபடி சிந்தித்தவன், நிமிர்ந்து அவளை நோக்கினான்.

  அவள் விழிகள் அவனையே இமைக்காமல் நோக்கி கொண்டிருந்தது.

  அதை கண்டவனின் மனதில் பெரிய ஏக்க சூறாவளியே உருவானது.

  'நோ... இவள் என்னை விட்டு எங்கும் செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். இவள் எனக்கு சொந்தமானவள்... இவளை காக்கின்ற பொறுப்பு எனக்கு மட்டுமே உரித்தானது...' என்று மீண்டும் பிதற்ற ஆரம்பித்தான்.

  பார்ப்பதற்கு உயரத்தில் சற்று சிறியதாக இருப்பதாலோ என்னவோ... அவன் கண்களுக்கு அவள் குழந்தையாகவே தோன்றினாள். விவரமில்லா அக்குழந்தையை எங்கும் தனியே அனுப்ப அவன் மனம் விரும்பவில்லை.

  ஏனோ அவன் மனதும், மூளையும் அவனுக்கு அதையே திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டே இருந்தது.

  தான் சொல்வதை ஏற்றுக் கொண்டு, தன் வழியில் செல்ல தன்னை அனுமதிக்க மறுக்கிறானே... இவன் மனதில் அப்படி என்ன தான் இருக்கிறது... அடுத்து என்ன செய்ய போகிறான்? என்று கவலையடைந்தாள் நந்தினி.

  லேசாகத் தொண்டையை செறுமியவன், "நந்தினி!" என்று மெல்ல அழைத்தான்.

  ம்... என்றவாறு அவனை நோக்கினாள் அவள்.

  "கண்டிப்பாக நீ போய் தான் ஆக வேண்டுமா?" என்றான் ஏக்கத்தோடு.

  அவன் குரலில் தென்பட்ட ஏக்கம், அவள் மனதைப் பிசைய விரல்களைப் பிசைந்தவள் தலைக்குனிந்தபடி, "ம்!" என்றாள்.

  லேசாகப் பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் ஸ்டீயரிங் வீலை அழுந்தப் பற்றினான்.

  "சரி எங்கே போக வேண்டும்?"

  "இல்லை... பரவாயில்லை, நானே போய் கொள்வேன். எனக்கு வயிற்று வலி சரியாகி விட்டது. ரொம்ப தாங்க்ஸ்!" என்று அவனுக்கு நன்றி உரைத்தபடி இறங்க முற்பட்டவளின் கரத்தை அழுந்தப் பற்றியவன், வேகமாக அவளைத் தன் புறம் திருப்பினான்.

  அவனுடைய வேகத்தால் திரும்பியவள், அவன் முகத்திலிருந்த கோபத்தைக் கண்டு திகைத்தாள்.

  "உன் மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ... தெரு தெருவாக அலைகின்ற பொறுக்கி என்றா?" என்றான் உறுத்து விழித்தபடி.

  "ஐயோ... அப்படியெல்லாம் எதுவும் இல்லை..." என்று அவள் தடுமாற,

  "அப்புறம் என்ன இதுக்கு..." கண்கள் மூடி தன்னை நிதானித்தவன், "உன்னைப் பற்றிய விவரம் எதுவும் எனக்கு தெரியக் கூடாது என்று எண்ணுகிறாய்?" என்றான் அவளை நேராகப் பார்த்து.

  "இல்லை... என்னால் எதற்கு உங்களுக்கு மறுபடியும் தொந்தரவு என்று தான்..." என்று மெல்ல தயங்கியபடி இழுத்தாள்.

  "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு... நிஜமாகவே எனக்கு தொந்தரவாக இருக்கும் என்று தான் என்னைத் தவிர்க்க பார்க்கிறாயா?" என்றவுடன் பதிலளிக்காமல் விழிகளைத் தாழ்த்தினாள்.

  ப்ச்... என்று சலித்தபடி வெளிப்பக்கமாக திரும்பிக் கொண்டான்.

  செய்வதறியாது தவித்தவள், "இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று மெல்லிய குரலில் கவலையோடு கேட்டாள்.

  அவள் முக வாட்டத்தை காண சகிக்காமல் மனம் வலித்தது.

  "எங்கே போக வேண்டும்?" என்றான் மொட்டையாக, அவள் புறம் திரும்பாமல்.

  "பழவந்தாங்கல்!"

  "ஓ!" என்றபடி காரை ஸ்டார்ட் செய்தவன், "அங்கே தான் உன் வீடா?" என்று ரோட்டில் கவனத்தை செலுத்தியபடி கேட்டான்.

  சற்று நேரம் அமைதியாக இருந்தவள், "ம்... இல்லை லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கிறேன்!" என்றாள் குரலிலோ... முகத்திலோ எந்த பேதமுமின்றி.

  திடுக்கிட்டு அவளைத் திரும்பி பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தினான்.

  "நீ ஹாஸ்டலிலா தங்கி இருக்கிறாய்?"

  "ம்!"

  "அம்மா... அப்பா?"

  "வெளியூரில் இருக்கிறார்கள்!" என்றாள் அவன் கேட்ட கேள்விக்கு விளக்கமாக.

  பார்வை சாலையை வெறித்திருந்தது, ஏனோ அவளின் நிலை ரமணனுக்கு சற்று உறுத்தலாக இருந்தது... அவளிடம் எதுவோ சரியில்லை என்று தோன்றியது.

  அதனால் தான் அவளை சந்தித்த முதல் நொடியில் இருந்தே... அவளைத் தனியே அனுப்ப அவன் மனம் விளையவில்லை என்பது புரிந்தது.

  நெற்றியை சுருக்கியபடி சற்று சிந்தனையில் ஆழ்ந்தான், அவளும் எதையும் பேச முயற்சிக்கவில்லை.

  சட்டென்று அவளின் உடல்நிலை நினைவுக்கு வர, "இப்பொழுது என்ன செய்யலாம்?" என்றான் அவளிடம் மெதுவாக.

  "ம்...?" என்று கேள்வியாய் திரும்பினாள்.

  "ஆன்ட்டி வேறு உனக்கு அபென்டிசைஸ் என்று சொல்லியிருக்கிறார்களே... உடனடியாக லேப்ரோஸ்கோப் செய்யவில்லை என்றால் இன்பெக்ஷன் ஸ்ப்ரெட்டாகி விடும் என்றார்களே..." என்றான் கவலையோடு.

  "ப்ச்... பார்த்துக் கொள்ளலாம்!" என்றாள் அலட்சியமாக.

  அவனுள் அடங்கியிருந்த கோபம் மீண்டும் சுறுசுறுவென்று மேலேறியது.

  "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? ஹெல்த் விஷயத்தில் அப்படியென்ன அலட்சியம் உனக்கு... ம்?" என்று அவளை முறைத்தான் ரமணன்.

  ச்சே... என்றபடி முகத்தை சுளித்தவள், "இப்பொழுது என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்?" என்றாள் எரிச்சலாக.

  "ம்... உடனே ஆன்ட்டியிடம் பேசி உனக்கு ட்ரீட்மென்ட் டேட் பிக்ஸ் பண்ண வேண்டும்!" என்றான் தீவிரமாக.

  இவன் தன்னை விடவே மாட்டேனா... என்கிற எரிச்சல் மிகையுற, "அப்படியென்ன ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு என் மேல்?" என்று டென்ஷனில் வார்த்தையை விட்டாள் நந்தினி.

  அவள் விழிகளையே தீர்க்கமாக பார்த்தவன், "சொல்கிறேன்... ஆனால் இப்பொழுது அல்ல!" என்றபடி மீண்டும் ஹாஸ்பிடலை நோக்கி காரைச் செலுத்த ஆரம்பித்தான் அவன்.

  அவனின் அர்த்தம் பொதிந்த பார்வையிலும், பேச்சிலும் திகைத்தவள்... பேசா மடந்தையாகி புருவம் சுளித்தபடி அமர்ந்து இருந்தாள்.

  மீண்டும் மருத்தவரை சந்தித்து அவள் சிகிச்சை தொடர்பாக அனைத்து விஷயங்களையும் ரமணன் பேசி முடிக்கும் வரை அவள் வாயே திறக்கவில்லை, இடையில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தாள்.

  அவனும் அவளை எதுவும் வற்புறுத்தவில்லை, முதலில் அவள் உடல்நிலையை சீராக்க வேண்டும்... பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

  மறுநாள் காலை லேப்ரோஸ்கோபிக் செய்து விடலாம் என்றார் மருத்துவர். ஆனால் அதற்கு உடன்பட மறுத்து விட்டான் ரமணன்.

  நந்தினியை எண்ணி அவனுக்கு பயமாக இருந்தது. எந்த நேரம் எப்படி மாறுவாளோ என்று தெரியாத நிலையில் சிகிச்சையை தள்ளி போட அவன் மனம் விரும்பவில்லை.

  உரிமையில்லாத நிலையில் அவளை வெகுநேரம் சமாளிப்பதும் சிரமம். ஏதோ ஒரு கோபத்திலும், குழப்பத்திலும் அவன் சொல்வதற்கு சரி என்று தலையசைத்து விட்டாள்... அது எந்த நேரம் என்றாலும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் அன்று இரவே அவளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரிடம் கூறி விட்டான்.

  ஆனால் வயதிலும், அனுபவத்திலும் பெரியவரான அவருக்கோ அவனை நினைத்து கவலையாக இருந்தது. தேவையில்லாமல் ஏதாவது ரிஸ்க் எடுக்கிறானோ... என்று.

  சிகிச்சைப் பற்றிய பேச்சை ஆரம்பிக்கவும், நந்தினியை பற்றிய உண்மையை அவரிடம் கூறி விட்டான் ரமணன்.

  அதிலிருந்து தான் அவன் எதுவும் சட்டச்சிக்கலில் மாட்டி விடக் கூடாதே என்று பயந்தார் அவர். எது வந்தாலும் தான் சமாளித்து விடுவேன் என்று நம்பிக்கையளித்தான் அவன்.

  அதன்பிறகே அவரும் நந்தினியை அட்மிட் செய்து அவளுக்கு வேண்டிய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.

  ரூமிற்குள் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த ரமணனை உம்மென்ற நந்தினியின் முகமே வரவேற்றது.

  மெல்ல இதழ்களில் புன்னகை அரும்ப அவள் அருகே சென்றவன், "என்ன மேடம்... தீவிர யோசனையில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது? ம்... இல்லை மனதிற்குள்ளே என்னை திட்டிக் கொண்டிருக்கிறாயா?" என்றான் அவளை வம்பிழுப்பவனாக.

  நிமிர்ந்து அவனை முறைத்தவள், "நான் பாட்டுக்கு அமைதியாகத் தானே நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறேன்... அப்புறம் எதற்கு என்னை வம்பிழுக்கிறீர்கள்!" என்றாள் கோபமாக.

  "அது தானே பயமாக இருக்கிறது... இம்மீடியட்டா சண்டை போடுபவர்களை கூட நம்பி விடலாம். ஆனால் அமைதியாக திட்டம் போடுகிறவர்களை நம்பவே முடியாதுமா... உன்னை பார்த்தால் ஏதோ வில்லி கணக்காக யோசிப்பது போல் தோன்றுகிறது. என்ன செய்யப் போகிறாய்?" என்று ஒற்றை விரலால் தாடையை தட்டியபடி தீவிரமாக சிந்தித்தான்.

  அவன் பாவனையை கண்டு அவள் முகம் இளகியது, ஆனால் சிரிக்காமல் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

  அவள் முகத்தை கண்டவனின் மனதில் அமைதி ஏற்பட, எதிரில் அமர்ந்தபடி அடுத்த நிலைக்குத் தாவினான் அவன்.

  "என்ன படித்திருக்கிறாய்? எங்கே வேலை பார்க்கிறாய்?"

  "நீங்கள் கேட்டால்... நான் உடனே சொல்லி விட வேண்டுமா? அதென்ன எப்பொழுதும் உங்கள் சொல்படி தான் நான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? முடியாது... சொல்ல மாட்டேன்!" என்றாள் பிடிவாதமான குரலில்.

  அவளின் குழந்தைதனத்தை ரசித்தவனுக்கு, அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொஞ்ச வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

  "சொல்லா விட்டால் போ... உன்னைப் பற்றிய உண்மையை எப்படி தெரிந்துக் கொள்ள முடியுமோ... அப்படித் தெரிந்து கொள்கிறேன்!" என்றான் சவாலாக.

  ஒரு கணம் திகைத்து விழித்தவள், "எப்படி?" என்றாள் சந்தேகமாக.

  "ஸோ ஸிம்பிள்... ஊரில் எத்தனை டிடெக்டிவ் ஏஜென்சீஸ் இருக்கிறது!" என்றான் கூலாக போனை நோண்டியபடி.

  அவனை அரண்டு போய் பார்த்தவள், "இல்லை... வேண்டாம். நானே சொல்லி விடுகிறேன்!" என்றாள் வேகமாக.

  "தேவையே இல்லை... உன்னிடம் ஒவ்வொன்றுக்கும் கெஞ்சுவதற்கு, அவர்களிடம் கேட்டால்... ஆதி முதல் அந்தம் வரை உன்னைப் பற்றிய அனைத்து விவரத்தையும் விசாரித்து சொல்லி விடுவார்கள்!" என்றான் வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட அலட்சியத்துடன்.

  "இல்லை... ப்ளீஸ் வேண்டாம். கண்டவர்களிடம் என்னைப் பற்றி விசாரிக்க சொல்லாதீர்கள் ப்ளீஸ்..." என்று குரல் நடுங்க கூறியவள் முகம் சிவந்து அழ ஆரம்பித்தாள்.

  "ஏய்..." என்றபடி வேகமாக எழுந்து அவளருகே சென்றவன், "என்னம்மா நீ இவ்வளவு சென்ஸிட்டிவ்வாக இருக்கிறாய்...? நிச்சயமாக அந்த மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன். சும்மா விளையாட்டுக்கு சொல்வதற்கெல்லாம் யாராவது இப்படி அழுவார்களா... ம்?" என்று அதட்டியபடி அவள் கன்னங்களைத் துடைத்து விட்டான்.

  கதவைத் தட்டும் ஒலி கேட்டு நந்தினி வேகமாக தன் முகத்தை துடைக்க, ரமணன் அவளிடமிருந்து சற்று விலகி நின்றான்.

  "என்னவாயிற்று... முகமெல்லாம் சிவந்து கிடக்கிறது?" என்று வினவியபடி அவளின் பிபியை செக் செய்தாள் நர்ஸ்.

  நந்தினியின் பார்வை கேள்வியாய் உயர்ந்து அவன் முகத்தில் நிலைத்தது.

  "ஒன்றுமில்லை... ஆப்ரேசனை நினைத்து சற்று பயப்படுகிறாள்!" என்றான் சமாளிப்பாக.

  அவள் முகத்தில் நிம்மதி பரவ விழிகளை தாழ்த்தினாள்.

  "ஓ! அதெல்லாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. முதலில் இது ஆப்ரேசனே கிடையாது... ஜஸ்ட் எ சின்ன ட்ரீட்மென்ட் தான். டோன்ட் வொர்ரி!" என்று அவள் கன்னம் தட்டிவிட்டு, "எல்லாம் நார்மலாக இருக்கிறது!" என்று ரமணனிடம் தெரிவித்து விட்டு வெளியேறினாள்.

  அவளிடம் திரும்பியவன், "நீ ஏன் இப்படியிருக்கிறாய்? தொட்டதற்கெல்லாம் அழுகிறாய். போல்டாக இருக்க வேண்டும்... எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். அதுவும் சிட்டியில் தனியாக வேறு இருக்கிறாய்... உனக்கு இது மிகவும் அவசியம்!" என்று அவளுக்கு அறிவுறுத்தினான்.

  மாறாக அவன் பேச்சைக் கேட்டு அவள் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருகி வழிந்தது.

  அதைக் கண்ட அவனுக்கு அவளை நினைத்து வேதனையாக இருந்தது.

  'இந்தப் பெண் ஏன் இப்படியிருக்கிறாள்? எதையும் சொல்லவும் மறுக்கிறாள்... என்ன பிரச்சினை என்றே புரியவில்லை... என்ன தான் செய்வது?' என்று வருத்தமுற்றான்.

  "உஷ்... போதும்மா... தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. உனக்கு எந்த ஹெல்ப் வேண்டுமென்றாலும் பயப்படாமல் என்னிடம் கேள். நான் இருக்கிறேன் உனக்கு!" என்றான் அழுத்தமாக.

  கண்ணீரில் மிதக்கின்ற விழிகளை உயர்த்தி அவனை நோக்கியவள் பின் தாழ்த்தியபடி முகத்தை துடைத்தாள்.

  பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் எதுவும் பேசாமல் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான். அவளும் மறுப்பேச்சின்றி வாங்கி குடித்தாள்.

  சற்று நேரத்தில் சிகிச்சைக்காக அவளை ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்றார்கள்.

  அவள் கரத்தைப் பற்றி அழுத்தியவன், "ஆல் தி பெஸ்ட்! இதோடு அனைத்து வலியும் சரியாகி விடும்!" என்றான் புன்னகையுடன்.

  அவன் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்தவளின் இதழ்களில் மெல்லிய மின்னல் கீற்றாய் புன்னகை அரும்பியது.

  -தொடரும்
   
   
 7. Monies

  Monies Wings

  Messages:
  6
  Likes Received:
  2
  Trophy Points:
  63
  nice deepa waiting next
   
   
 8. anithasweetheart

  anithasweetheart Wings

  Messages:
  1
  Likes Received:
  0
  Trophy Points:
  23
   

Share This Page