_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee / yennil uraiyum uyir nee -28

yennil uraiyum uyir nee -28

உயிர் : 28

 

“மயூ என்ன செய்தும்மா…?” அதிகாலையில் எழுந்தமர்ந்து  ஜன்னல் வழியே வெறித்து பார்த்து கொண்டிருந்த மயூரியின் அருகில் வந்த சுமதி கவலையுடன் கேட்க… கண்கள் கலங்க உதடுகள் துடிக்க திரும்பி பார்த்தவளின் முகம் கண்டு அவர் மனதுக்குள் துணுக்குற்றார்.

 

“என்னடா மயூம்மா…?” அவர் கேட்டதும் தான் தாமதம் அவர் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் அவள். அவளின் அழுகையில் மனம் பதறி போனவராய்,

 

“மாசமா இருக்கும் பொண்ணு இப்படி அழலாமா? இந்த மாதிரி நேரத்தில் நீ சந்தோசமாயிருக்க வேணாமா? உன் மனசுல அப்படி என்ன கவலைம்மா?”

 

“அவ… அவர்…” அழுகையில் அவள் திக்க… அவள் தன் கணவனை தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டவர்,

 

“மாப்பிள்ளைக்கு என்னம்மா?”

 

“நேத்திலிருந்து அவர் ஃபோன் பேசவேயில்லை… நான் பண்ணினாலும் அவர் எடுக்க மாட்டேங்கிறார். எனக்கு அவர் நியாபகமா இருக்குது” மனதை மறையாது உரைத்தவளை கண்டு அவருக்குமே பரிதாபமாக தான் இருந்தது. அவரும் இந்த வயதை தாண்டி தானே வந்திருக்கிறார். அவருக்கு தெரியாதா மகளின் மனது?

 

“வேலை ஏதாவது இருந்திருக்கும்… இதுக்கு போய் கவலைப்படலாமா மயூ…?” மகளை அவர் சமாதானப்படுத்த… அதற்கு சரியென்று அவள் தலையசைத்தாலும் மனதுக்குள் ஏதோ ஒன்று அவளை கலவரப்படுத்த தான் செய்தது.

 

“அம்மா… உங்க பெரிய பொண்ணை கொஞ்சியது போதும் எனக்கு காலேஜ்க்கு நேரமாயிருச்சு… டிபன் செய்ங்க போங்க…” குரல் கொடுத்தபடி அங்கே வந்தாள் மஞ்சரி. அக்காவை கண்டவள் அவளிடம் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

 

“ஏண்டி… மயூ நேத்து தான் ஊரிலிருந்து வந்திருக்கா… இன்னைக்கு ஒருநாள் லீவ் போட்டுட்டு அவ கூட இருக்கலாம்ல…” அலுத்து கொண்டார் சுமதி.

 

“அம்மா… ஒரு லெக்சரர் பேசுற மாதிரியா பேசுறீங்க… சாதாரண அம்மா மாதிரி பேசுறீங்க… இட்ஸ் டூ பேட்…”

 

“முதல்ல நான் அம்மா… அதுக்கப்புறம் தான் லெக்சரர் எல்லாம்… வாயடிக்காம முதல்ல காலேஜுக்கு லீவ் போடு…” வெகுநாட்களுக்கு பின் வீடு வந்திருக்கும் மகளினால் இழந்த மகிழ்ச்சி திரும்ப கிடைத்ததால் உண்டான சந்தோசத்தில் அவர் பேச…

 

“நான் யாருக்காகவும் லீவ் போட மாட்டேன்…” மயூரியை முறைத்தபடி அவள் கூற… அவளின் பேச்சில் மயூரியின் மனம் வாடியது.

 

“மஞ்சு ஏண்டி இப்படி பேசுற… நான் யாரோவா?”

 

“எங்களை பத்தி கவலைப்படாம ஓடிப் போன நீ யாரோ இல்லாம… வேறு யாராம்?” அவள் சொல்லி முடிக்கவில்லை… சுமதி அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார்.

 

“மஞ்சு… அக்காவே ஆனாலும் வார்த்தையை அளந்து பேசணும். வீணே கொட்டிட்டு திரும்ப வருந்தாதே…” அவர் எச்சரிக்க…

 

“அம்மா…” மஞ்சு அதிர்ந்து போய் அவரை பார்த்தாள்.

 

“என்ன தான் மயூ மேல் தப்பிருந்தாலும் உன் அக்காங்கிற உறவு இல்லாமல் போகுமா? இல்லை நீ அவள் தங்கைங்கிற உறவு விட்டு போயிருமா? வேணாம்ன்னா தூக்கி தூர போட்டுட்டு போற பந்தமில்லை இது… புரிஞ்சதா? மயூ கிட்ட சாரி கேளு…” அன்னையின் பேச்சில் தவறை உணர்ந்தவளாய்,

 

“என்னை மன்னிச்சுக்கோ மயூ… உன்னை பிரிஞ்சி நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அந்த கோபத்தில் தான் பேசிட்டேன்…” என்ற தங்கையை…

 

“என் கிட்ட கோபப்படாம வேறு யார் கிட்ட கோபப்பட போற மஞ்சு… நீ இப்படி உரிமையோட திட்டுறது எனக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு. நான் செஞ்ச தப்பும் அப்படிப்பட்டது தான்” என்ற மயூரி அவளை அணைத்து கொண்டாள். மகள்கள் இருவரின் பாசத்தில் மனம் நெகிழ்ந்து போனார் சுமதி.

 

அங்கே ஆரனும் மயூரியின் நினைவில் தவியாய் தவிக்க தான் செய்தான். அவளிடமிருந்து வந்த அழைப்புகள், குறுஞ்செய்தி எல்லாம் எண்ணிலடங்காதவை…! ஒரு நாள் இரவு பொழுது தாண்டுவதற்கே இத்தனை அழைப்புகள் என்றால்… இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள்…? தான் எடுக்காமல் இருப்பதால் ஏதேனும் தவறாக நினைத்து கொள்வாளோ? தன் மீது கோபம் கொள்வாளோ? இப்படி பல யோசனைகள் அவன் மனதில் ஓடினாலும்… அவளின் அழைப்புக்கு பதில் பேசவும் இல்லை… அவளை அழைக்கவும் இல்லை. தன்னவளை விட அவளின் தந்தை கூறிய வார்த்தை தான் பெரியதா? என்று கூட அவன் மனம் யோசிக்க தான் செய்தது. ஆனாலும் அதற்கான விடை அவனிடத்தில் இல்லை.

 

ஆனால் அதற்கான விடை அவனின் ஆழ்மனதில் இருந்தது. கடந்தகாலத்தில் அவன் பட்ட அடி அவனால் யார் மீதும் முழுமையாய் அன்பு, நம்பிக்கை வைக்க முடியவில்லை. ஆனால் அதை அவன் உணரவில்லை. அவனை போல மனநிலையில் இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை விரும்பி, நம்பிக்கை வைத்து காதலித்ததே அதிசயம். அப்படிப்பட்டவன் தன்னவள் தன்னிடம் மட்டுமே அன்பை பொழிய வேண்டும்… அவளுக்கு தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ வேரூன்றி இருந்தது அவனுக்கே தெரியவில்லை. அவன் தன் மனதை ஆராயவும் முற்படவில்லை. மாமனாரின் இந்த விசப்பரீட்சைக்கு அவன் தயாரானது கூட அவளின் அன்பை பரிசோதிக்க தான் என்பதை அவன் உணரவில்லை. அதை அவன் உணர்வானா? உணரும் போது…?

 

************************************************

 

“அண்ணி… எப்படி இருக்கீங்க?” ஆர்ப்பாட்டமாய் மயூரியின் வீட்டினுள் நுழைந்தான் வருண்.

 

“வாங்க வருண்…” மயூரி அவனை வரவேற்க…

 

“வந்தேன்… வந்தேன்…” என்று சொல்லி கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் அவன்.

 

அவள் தன் தந்தையிடம் அவனை பற்றி சொல்ல… “வணக்கம்ப்பா…” என்று அவர் சொல்ல…

 

“வணக்கம்ங்க…” என்றவன் அதோடு வாயை வைத்து கொண்டு சும்மாயிருந்திருக்க வேண்டும்… அதை விட்டுவிட்டு, “நான் தான் தோஸ்த்க்கும், அண்ணிக்கும் மேரேஜ் முடிஞ்ச புதுசில் ஹெல்ப் பண்ணினேன். தோஸ்துக்கு நான் ரைட் ஹன்ட்ன்னா பார்த்துக்கோங்க… இப்பவும் தோஸ்த் சொல்லி தான் அண்ணி இங்கே வந்திருக்கிற விசயமே எனக்கு தெரியும்” அவன் பேச பேச…

 

‘நீ தானா அந்த குயில்…?’ என்ற ரீதியில் அவனை முறைத்து பார்த்தார் ராகவன். அவரின் முகம் அந்தளவுக்கு கடுமையை காட்டியது.

 

அவர் முகம் மட்டும் மாறவில்லை… மயூரியின் முகமும் மாறியது. அது ஏனென்றால் கணவன் தன் அழைப்பை எடுக்கவும் இல்லை… அதே போல் அவனும் அவளை அழைக்கவில்லை… அப்படியிருக்கும் போது வருணுக்கு மட்டும் அவன் பேசியிருக்கான் என்றால்…? எங்கேயோ இடிப்பது போல் அவளுக்கு தோன்ற… அதை வருணிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் போட்டு புதைத்து கொண்டாள்.

 

வருண் ஏதேதோ பேச… அங்கிருந்த மயூரியும் ராகவனும் வெவ்வேறு மனநிலையில் எதையோ யோசித்து கொண்டு பதிலளிக்க… அவனிடம் தெளிவாய் பேசியது சுமதி மட்டுமே. கடைசியில் வருண் விடைபெற்று கொண்டு வெளியில் வந்தவன் தன் பைக்கில் ஏறும் போது சரியாக அங்கே வந்து சேர்ந்தாள் மஞ்சரி.

 

“ஹேய் நீ எங்கே வந்த?” அவனை பார்த்த கோபத்தில் அவள் பல்லை கடிக்க…

 

“நிச்சயமா உன்னை பார்க்க வரல…” பதிலுக்கு கூலாக அவன் பதிலளிக்க…

 

“அப்படியொரு நினைப்பு வேற இருக்கா?” எரிச்சலுடன் மொழிந்தவள்… “இப்போ எதுக்கு இங்கே வந்த?” என்றவள்… “நீ… நீ… மயூவை பார்க்க தானே வந்த… அப்படின்னா அவளை பத்தின எல்லா விவரமும் உனக்கு தெரியும்… அப்படித்தானே?” அவள் கூர்மையான பார்வையுடன் கேட்க…

 

“என் டாலிக்கு இவ்வளவு அறிவு இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சே… ச்சு… ச்சு..” அவன் புகழ்வது போல் அவளை மட்டம் தட்ட… அவளின் முகம் அவமானத்தில் சிவந்தது.

 

“ஏய்… என் அறிவுக்கு என்னடா குறைச்சல்?” மீண்டும் அவன் மேல் பாய…

 

“எதுவுமே குறைச்சல் இல்லை டாலி…” நக்கலாய் கூறியவன் அவளை மேலிருந்து கீழாக நிதானமாய் ஒரு பார்வை பார்க்க… அதில் ஆத்திரம் அடைந்தவள்…

 

“யூ… யூ…” அவளின் பொறுமை காற்றில் பறக்க… அவனை அடிப்பதற்கு ஏதுவாக அருகில் ஏதும் இருக்கிறதா? என்று சுற்றும் முற்றும் அவள் தேட… அதை கண்டு வாய் விட்டு அவன் சிரிக்க…

 

“என்ன கொழுப்பாடா உனக்கு… என் அப்பாக்கு மட்டும் நீ தான் ஹெல்ப் பண்ணினேன்னு தெரிஞ்சது அவ்வளவு தான்…”

 

‘ஓ… அதான் மாமனார் என்னை அவ்வளவு அன்பா பார்த்தாரா? இதுக்கு மேலும் இங்கே இருந்தா அப்பாவும், மகளும் நம்ம முதுகுல டின் கட்டினாலும் கட்டிருவாங்க… வருண் எஸ்கேப்…’ மனதுக்குள் நினைத்தவன் பைக்கை கிளப்பி தயாராக வைத்து கொண்டு,

 

“டாலி… ஒரு உண்மையை சொல்லட்டுமா?’ என்றவனை முறைத்து பார்த்தவளை கண்டு கொள்ளாது, “நான் உண்மையில் உன்னை பார்க்க தான் வந்தேன்… அண்ணியை பார்க்க வந்தது சும்மா ஒரு சாக்கு தான். அன்னைக்கு கோவிச்சிட்டு போன என் டாலி எப்படி இருக்காளோன்னு பார்க்க ஓடோடி வந்தேன்” என்றவன், “டாலி ஐ லவ் யூ செல்லம்…” கண்ணை சிமிட்டி சொல்லியவன் அவளின் பதிலை எதிர்பாராமல் பைக்கை கிளப்பி கொண்டு வேகமாக சென்றான்.

 

“யூ… ராஸ்கல்… அடி வாங்குவதுக்கு பயந்திட்டு கோழை மாதிரி ஓடுது பாரு லூசு” கோபத்துடன் முணுமுணுத்தவள் வீட்டினுள் சென்றாள். மயூரியின் காதல் திருமணத்தால் வீட்டில் ஏற்பட்ட விளைவுகளை கண்டு அவளின் மனதில் ஏற்பட்ட வருண் மீதான அந்த சிறு ஈர்ப்பு கூட காணாமல் மறைந்து போயிருந்தது.

 

வரவேற்பறையில் இருந்த தொலைப்பேசி அடித்து கொண்டிருக்க மயூரி தான் குழந்தை சுமந்திருப்பதை கூட உணராமல் ஓடி வந்து அதை எடுக்க… மறுமுனையில் ராகவனின் நண்பர் ஒருவர் பேச… அதை தந்தையிடம் கொடுத்துவிட்டு ஏமாற்றம் கவிழ்ந்த முகத்துடன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். ராகவன் மகளின் முகத்தை பார்த்து கொண்டே தன் நண்பரிடம் சீக்கிரம் பேசிவிட்டு தொலைப்பேசியை வைத்தவர் அவள் அருகில் சென்று அமர்ந்தார்.

 

“என்ன மயூ… ஏன் முகமெல்லாம் வாடியிருக்கு?” மகளின் முகவாட்டம் எதனால் என்று தெரிந்திருந்தும் ஒன்றும் அறியாதவர் போல் அவர் வினவ…

 

“அவர் என்னோடு பேசி மூணு நாள் ஆயிருச்சுப்பா… வருண் கூட எல்லாம் பேசியிருப்பவர் எனக்கு மட்டும் ஏன் பேசல? எனக்கு தினமும் ஃபோன் பண்றேன்னு சொன்னவர்… இப்போ இப்படி நடந்துக்கிறாருன்னா… எனக்கு என்னமோ பயமாயிருக்கு” அவள் முகத்தில் அப்பட்டமாய் கவலை தெரிந்தது.

 

“எதுக்கு பயம்மா…?” ராகவன் மகளை கூர்மையுடன் பார்த்தார். அவரின் அனுபவ அறிவு ஏதோ சரியில்லை என்றது.

 

“அவர் இந்த மாதிரி பேசாமலிருந்தால்… அவர் கோபமா இருக்காருன்னு அர்த்தம்… இப்போ என் மீது என்ன கோபம்ன்னு தெரியல? நான் எந்த தப்பும் செய்யலையே…” பரிதாபமாய் சொன்ன மகளை நினைத்து அவருக்கு பாவமாயிருந்தது. அதேசமயம் அந்த ஆரன் மேல் கோபம் கோபமாய் வந்தது.

 

“அப்போ அடிக்கடி அவன் உன் மேல் கோபப்பட்டு இருக்கான்… அப்படித்தானே…” கேள்வி கேட்டு கொண்டே அவளை ஆழ்ந்து பார்க்க…

 

“அப்பா…” தந்தை தன் கணவனை ஏகவசனத்தில் பேசியது கேட்டு அவள் திகைத்து போய் அவரை பார்த்தாள்.

 

“நான் கேட்ட கேள்விக்கு உண்மையா பதில் சொல்லும்மா?”

 

“இப்போவெல்லாம் அப்படி கிடையாது…” தலையை குனிந்து கொண்டு அவள் சொல்ல…

 

“இப்போ கிடையாதுன்னா… முதல்ல அந்த மாதிரி நடந்துக்கிட்டு இருந்தானா?”

 

“அவரை ஏன்ப்பா அவன் இவன்னு சொல்றீங்க? என்ன தான் இருந்தாலும் அவர் உங்க மாப்பிள்ளை இல்லையா?” அவளின் பேச்சில் அவளின் அடக்கப்பட்ட கோபம் வெளிவந்தது.

 

“யாருக்கு யார் மாப்பிள்ளை… உன்னை அவன் கல்யாணம் பண்ணியிருந்தாலும் ஒரு கொலைக்காரன் எனக்கு மாப்பிள்ளையாக ஒரு போதும் முடியாது?” அவரையும் அறியாமல் அவரின் மனம் வெளிவந்தது. அவரின் பேச்சு அவளுக்கு அதிர்ச்சியை அளித்தது. தந்தை மனதில் இன்னமும் தன் கணவன் மேல் இவ்வளவு வன்மம் இருக்கும் என்று அவளுக்கு இப்போது தான் தெரிந்தது.

 

“அதுக்கு ஏதாவது தகுந்த காரணமிருக்கும்ன்னு என் மனசுக்கு தோணுதுப்பா. தேவையில்லாம அவரை இப்படி பேசாதீங்க? அவர் என்ன மாதிரி நிலையில் இப்படி ஒரு காரியம் செய்தாரோ?” தன்னவனை பற்றி அவருக்கு உணர்த்திவிடும் வேகத்தில் மயூரி பேச… அவள் தன் கணவனுக்கு சாதகமாக பேசுவது கண்டு அவரின் ஆத்திரம் எல்லையை கடந்தது.

 

“மயூ…” அவரின் காட்டுக்கத்தலில் உள்ளே இருந்த சுமதி ஓடிவந்தார். நல்லவேளை மஞ்சரி கல்லூரி சென்றிருந்தாள்.

 

“என்னங்க… ஏன் சத்தம் போடுறீங்க?” மனைவியின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்,

 

“பின்னே அவன் என்ன நாட்டு விடுதலைக்காகவா போராடி ஜெயிலுக்கு போனான்?” ஆக்ரோசமாய் அவர் கர்ஜிக்க…

 

“என்னங்க இது? மாசமாயிருக்கும் பொண்ணு கிட்ட போய் இது என்ன பேச்சு?” கணவரை சுமதி கடிய…

 

“நீ பேசாமயிரு சுமி… இன்னைக்கு எனக்கு இரண்டில் ஒரு பதில் தெரிஞ்சாகணும்” மனைவியை அடக்கியவர்…

 

“சொல்லு மயூ… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?”

 

“நிச்சயம் நீங்க கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியும்…” நிமிர்ந்து அமர்ந்தவள் நேராய் அவரை பார்த்தவாறு… “அவர் எந்தவித குற்றமும் செய்துவிட்டு ஜெயிலுக்கு போகல… அதை மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும்” தன்னவன் மீது கொண்ட நம்பிக்கையில் அவள் கம்பீரமாய் கூற…

 

“குற்றம் பண்ணினவங்க தான் ஜெயிலுக்கு போவாங்க… இது கூட உனக்கு தெரியாதா மயூ?” அவரின் குரலில் ஏகத்துக்கும் எகத்தாளம் எட்டி பார்த்தது.

 

“உண்மை தான் இல்லைங்கல்ல… அப்படி அவர் கெட்டவராய், தப்பு செய்துட்டு ஜெயிலுக்கு போயிருந்தா… வெளியில் வரும் போது அவர் ரெளடியா தான் மாறியிருப்பார். இப்படி சாப்ட்வேர் எஞ்சினியராகும் அளவுக்கு படிச்சியிருக்க மாட்டாரு… அதிலிருந்தே புரியலையா அவர் நல்லவர் தான்னு”

 

“மயூ… சொல்றதும் உண்மையா இருக்கும்ங்க… அதுவுமில்லாமல் இப்போ அவர் மயூவோட கணவர்… அவளின் குழந்தைக்கு தகப்பன். இந்த மாதிரி நேரத்தில் நீங்க இப்படி பேசுறது நல்லாயில்ல…” மகளின் பேச்சை ஆமோதித்து சுமதி பேச… ராகவன் மனைவியை முறைத்தார்.

 

“நீ வாயை மூடு…” மனைவியிடம் எரிந்து விழுந்தார் அவர்.

 

“அப்பாவை பேச விடுங்கம்மா…” தாயிடம் கூறிய மயூரி… தந்தையிடம், “அப்பா நீங்க அவர் கிட்ட ஏதும் தவறா பேசினீங்களா? அதனால தான் அவர் என் கூட பேசாமலிருக்காரா?” தந்தையின் மனதை சரியாக கணித்தாள்.

 

“ஆமாம் நான் அவன் கிட்ட பேசினேன் தான்… உன் கூட ஃபோனில் பேச கூடாது… உன்னை பார்க்க வர கூடாதுன்னு சொன்னேன் தான்…”

 

“ஏன்ப்பா அப்படி சொன்னீங்க?” கண்களில் கண்ணீர் மல்க அவள் கேட்க…

 

“ஏன்னா நீ என் மகள்… உனக்கு யாரை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும். இடையில் வந்து குழப்பம் பண்ண அவன் யாரு? அதான் அவன் கிட்ட அப்படி பேசிட்டு வந்தேன். உன் குழந்தை பிறந்ததும் தகவல் சொல்றோம்… வந்து வாங்கிட்டு போ… என் மகளுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். அத்தோட என் வீட்டு வாசலை கண்டவனும் மிதிக்க கூடாதுன்னு எச்சரிச்சிட்டு தான் வந்தேன்… அவன் உனக்கு வேணாம்… மறந்திரு…”

 

“என்னங்க…” அதிர்வுடன் கணவனை பார்த்தார் சுமதி.

 

“முடிந்தது எல்லாம் முடிந்தது…” முணுமுணுத்த மகளை தன் தோளில் ஆதரவாய் சாய்த்து கொண்டார் சுமதி.

 

“இல்லை மயூ… நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசுறேன்… அவர் நிச்சயம் உன் மேல் தப்பில்லைன்னு உணருவாரு. நீ கவலைப்படாதே…” அவர் மகளை சமாதானப்படுத்த,

 

“இல்லைம்மா… அவரை பத்தி உங்களுக்கு தெரியாது” கணவனின் குணம் அறிந்து மனதுக்குள் பயந்தவளாய் அவள் மெல்ல விசும்பினாள்.

 

“நான் பேசுறேன் கண்ணா… இந்த மாதிரி நேரத்தில் நீ கவலைப்பட கூடாது” ஆறுதலாய் சொல்ல…

 

“அவரோட கடந்த காலத்தில் ஏதோ நடந்திருக்கும்மா… அதனால அவர் மனசுக்குள் ரொம்ப நொந்து போயிருக்கிறார். அவர் கிட்ட போய் அப்பா இப்படி பேசிட்டு வந்தா… அவர் நிச்சயம் என்னை வெறுத்து விடுவார். வெளியில் பார்க்க தான் அவர் பெரிய மனிதர்… ஆனால் உள்ளுக்குள் அவர் அன்புக்கு ஏங்கும் ஒரு சின்ன குழந்தை மாதிரிம்மா. அந்த அன்பு மறுக்கப்படும் போது அவர் சுபாவம் முரட்டு குழந்தை போல் மாறிவிடும். என்ன சமாதானம் செய்தாலும் அவர் கோபம் குறையாது. அப்பா பேசிய பேச்சுக்கு அவர் என் மேல் தான் கோபமாய் இருப்பாரு. இனி என் கூட பேச மாட்டாரு… என்னை பார்க்க வர மாட்டாரு… எல்லாம் முடிந்து போயிருச்சும்மா…” அடக்கமாட்டாமல் ஓவென்று கதறியழ…

 

“அப்படிப்பட்ட சந்தேகம் குணமுள்ளவன் கூட எதுக்காக நீ வாழணும்…? பேசாம டிவோர்ஸ் வாங்கிட்டு நிம்மதியாயிரு… நீ இப்படி ஒவ்வொரு சமயமும் உன்னை அவன் கிட்ட ப்ரூவ் பண்ணி தான் வாழ்க்கை நடத்தணும்ங்கிற அவசியம் உனக்கில்லை” ராகவன் இரக்கமின்றி கூற…

 

“மொதல்ல நீங்க சும்மா இருக்கீங்களா? மகள் சந்தோசமா வாழணும்னு நினைக்கிறீங்களா? இல்லையா?” கணவரை சுமதி கடிய…

 

“இப்படிப்பட்டவனுடன் வாழ்றதும் ஒண்ணும் தான் வாழாமல் இருப்பதும் ஒண்ணும் தான்” ராகவன் சூடாய் பதிலளிக்க…

 

“நீங்க என்ன சொன்னாலும் என்னால் மனதை மாற்றி கொள்ள முடியாதுப்பா… அவர் இல்லைன்னா என் வாழ்க்கையில் சந்தோசமில்லை… நிம்மதியில்லை… எதுவுமேயில்லை… அது மட்டும் உறுதியாய் என்னால் சொல்ல முடியும்”

 

“நானே சொன்னாலும் என் பேச்சை கேட்டுக்கிட்டு உன்னை படுத்தற அவனெல்லாம் ஒரு மனுசனா? அப்போ யார் என்ன சொன்னாலும் அவன் அப்படியே நம்பிடுவானா?”

 

“நீங்க மட்டும் அவரை வார்த்தையால் படுத்தலாமாப்பா? அவர் நம்புறார் நம்பாமல் போறாரு… அது அவர் பிரச்சினை… அப்படியே நம்பினாலும் அவரின் சந்தேகத்தை போக்க வேண்டியது என் கடமை. ஏன்னா அவர் மனதில் உள்ள காதல், அன்பு எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் நீங்க அவரை காயப்படுத்தியது எந்தவிதத்தில் நியாயம்?” தந்தையின் கேள்விக்கு பதிளித்தவள்… “இவ்வளவு நடந்த பின்னும் இனி அவர் என்னை தேடி வர மாட்டார்… நான் தான் அவரை தேடி போணும். அம்மா நான் நாளைக்கே அவரை பார்க்க ஊருக்கு போறேன்ம்மா” அவள் தீர்மானமாய் தெரிவிக்க…

 

“இந்த மாதிரி நிலையில் நீ ட்ராவல் பண்ண வேணாம் மயூ… அது உனக்கும், குழந்தைக்கும் நல்லதில்லை” சுமதி மகளுக்கு எடுத்து கூற… தனக்காக இல்லையென்றாலும் தன் குழந்தைக்காக மனதை மாற்றி கொண்டாள்.

 

“சரிம்மா…” அரை மனதாய் அவள் தலையசைக்க…

 

“பெத்து வளர்த்த எங்களை விட அவன் உனக்கு முக்கியமாய் போய்ட்டான் இல்ல…” மகளின் பேச்சு கேட்டு ராகவனுக்கு மனது ஆற்றாமையால் தவித்தது.

 

“உங்க மேல் எனக்கு பாசம் இருக்கு… அன்பு இருக்கு… அதுக்கு மேலே மரியாதை இருக்கு… ஆனா… ஆனா… அவர் எனக்கு உயிர்… எங்கேயாவது உயிர் இல்லாமல் உடல் வாழுமா? இப்போ என் நிலைமை அப்படித்தான் இருக்கு” என்றவள் அதற்கு பின் வந்த நாட்களில் தந்தையிடம் பேசவில்லை… மௌனம் காத்தாள். ஆரனிடம் கூட அவள் பேசவில்லை. ஏனெனில் அவனின் குணம் அவளுக்கு தெரிந்தது என்பதால் அலைப்பேசியை அணைத்து தூர போட்டு விட்டாள்.

 

தந்தை என்றில்லை யாரிடமும் அவள் பேச விரும்பவில்லை. எப்போதுமே அமைதியாய் எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். இவளின் நிலை கண்டு சுமதி மனதுக்குள் கண்ணீர் விட்டவர் கணவரை கடிந்து பேசவும் தவறவில்லை. மஞ்சரி தன் பங்கிற்கு அக்காவை சந்தோசப்படுத்த நினைக்க… அதுவும் எந்தவித பலனையும் அளிக்கவில்லை.

 

அங்கே ஆரனும் அவளின் நிலைக்கு குறையாத மன வருத்தத்தில் இருந்தான். அடுத்தடுத்து வந்த அவளது அழைப்புகள் ஒருகட்டத்தில் அப்படியே நின்று போக அதுவும் அவனை பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாக்கியது. நாளுக்கு நாள் அதிகமாகும் அவளின் நினைவுகளிலிருந்து தப்ப வேலையில் தன்னை மூழ்கடித்து கொண்டான். நேரம் காலமற்ற ஐடி வேலை அவனை மகிழ்ச்சியாய் தன்னுள் இழுத்து கொண்டது.

 

இரண்டு வாரங்கள் கழித்து மருத்துவ பரிசோதனைக்கு சென்ற மயூரியின் உடல்நிலை மிகவும் மோசமாகியிருந்தது. அவளுக்கு ஏற்பட்ட மன அழுத்தம், பொதுவாய் கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு வரும் இயல்பான பயம் எல்லாம் சேர்த்து அவளின் ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் ஏற்றியிருக்க… அழையா விருந்தாளியாய் சர்க்கரை நோயும் அதனுடன் சேர்ந்து கொண்டது.

 

“உணவில் உப்பும், சர்க்கரையும் அளவோடு சேர்த்து கொடுங்க… கூடுமளவு இந்த இரண்டும் இல்லாமல் சாப்பிட்டாலும் நல்லதே” மருத்துவர் கூறியதை அமைதியாய் கேட்டு கொண்டு வந்த சுமதி, வீட்டிற்கு வந்து கணவரை பிடிபிடியென்று பிடித்து கொண்டார்.

 

“நல்ல ஆராக்கியமா இருந்த என் மகளை இந்த கதிக்கு ஆளாக்கியது நீங்க தான். அவ டெலிவரியில் மட்டும் ஏதாச்சும் சிக்கல் வந்தது… உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” அவரின் கோபத்தில் ராகவன் கூட அரண்டு விட்டார்.

 

மகளின் உடல்நிலை முன் அவரின் வறட்டு கௌவரம் ரொம்பநாள் நிற்க முடியவில்லை. அதிலும் மயூரியின் பாராமுகம் அவரை மிகவும் வதைத்தது. மகளிடம் பலமுறை பேச முயற்சி செய்தார். ஆனால் அவளோ அவரிடம் பேசவும் முயலவில்லை…. அவர் முகம் காணவும் விரும்பவில்லை. அவளுக்கு இனிய அதிர்ச்சி கொடுப்பதற்காக தன் தன்மானத்தை விட்டு விட்டு ஆரனுக்கு அலைப்பேசியில் அழைத்து பார்த்தார். அவனோ அவரின் அழைப்பை ஏற்கவில்லை. அவருக்குமே மகளின் அன்பை பெறுவதற்கு என்ன செய்வது? என்று தெரியவில்லை.

 

சரியாக பிரசவ நாளிற்கு இரண்டு நாள் முன்பு அவளை பரிசோதித்த மருத்துவர், “குழந்தை பொசிசன் எல்லாம் சரியாக இருக்கிறது. கர்ப்பப்பை வாய் கூட திறந்து தான் இருக்கு. ஆனாலும் இன்னும் வலி வராமல் இருப்பது ஆச்சிரியமா இருக்கு. நாளைக்கு வரைக்கும் பார்ப்போம்… வலி வரவில்லைன்னா ஆபரேசன் பண்ணிடலாம்” தெரிந்த மருத்துவர் என்பதால் அவளை பொறுமையுடன் கையாண்டார்.

 

மருத்துவர் அறுவை சிகிச்சை என்று கூறியதும் மயூரி மனதுக்குள் பயப்பந்து உருண்டது. தன் மனதின் பயத்தை கூட யாரிடமும் சொல்ல முடியாமல் அவள் உள்ளுக்குள் வைத்து மறுகி கொண்டிருந்தாள். அந்நேரம் அவளுக்கு ஆரனின் நினைவு தான் அதிகமாய் வந்தது. என்ன தான் பெற்றோர் அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினாலும்… தங்கை எப்போதும் உடன் இருந்தாலும் அவனால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை அவர்கள் யாராலும் நிரப்ப முடியவில்லை.

 

‘ஆரு… உடனே என்னை பார்க்க வர மாட்டீங்களா? உங்க நெஞ்சில் முகம் புதைய என்னை நீங்கள் அணைத்து கொண்டாலே என்னோட பயமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுமே… என்னை உயிர்பிக்கும் சக்தி உங்களுக்கு மட்டும் தானிருக்கு…’ உள்ளுக்குள் அவனை நினைத்து மறுகியவளுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது.

 

அவனில்லாமல் அவளில்லை… அவளின் ஒவ்வொரு அணுவும் அவனுக்காய் ஏங்கி தவிப்பதை அவளால் உணர முடிந்தது. அந்த கணம் அவன் மீதான அவள் காதலை நன்கு உணர்ந்து கொண்டாள். அவனின் செயலால் எந்த காதல் செத்து விட்டது என்று மனதுக்குள் புலம்பி தவித்தாளோ அந்த காதல் இன்னமும் சாகவில்லை… அவள் மனதுக்குள் புதையுண்டு தான் கிடக்கிறது என்பது உணர்ந்து கொண்டாள். அவள் தன் மனதை உணர்ந்த அந்த கணம் அவனை காண அவள் தவிக்கும் தவிப்பு இன்னமும் அதிகமானது.

 

மருத்துவர் கெடு கொடுத்த நாளன்று அவளுக்கு லேசாய் வலியெடுக்க… உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். அவளை பரிசோதித்த மருத்துவரோ, “வலி விட்டு விட்டு தான் வருது… முதல் குழந்தை வேறு… இன்னும் கொஞ்ச நேரமாகலாம்…” என்று கூறிவிட்டு செல்ல… அவளுக்கோ பயத்தில் முத்து முத்தாய் வியர்த்தது.

 

“அம்மா அவரிடம் நான் பேசணும்மா?” முகத்தில் பயத்தை தேக்கி வைத்து கேட்டவளை கண்டு அவருக்கும் பயம் எழுந்தது.

 

“மயூ நீ ஃபோன் பண்ண வேணாம்… நான் அவருக்கு ஒரு மெசேஜ் பண்ணி பார்க்கிறேன்” மஞ்சரி அவளின் நிலைமையை உணர்ந்து சொன்னாள்.

 

மஞ்சரியின் குறுஞ்செய்தி கிடைத்த அடுத்த நொடி ஆரன் அவளின் அலைப்பேசிக்கு அழைத்தான். மஞ்சரி மயூரியிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி கொள்ள… அவனின் எண்ணை ஆசையுடன் பார்த்து கொண்டே அலைப்பேசியை வாங்கியவள்,

 

“ஆரு…” என்று அழுது விட்டாள்.

 

“பேபி… இந்த மாதிரி நேரத்தில் நீ தைரியமாயிருக்க வேண்டாமா? அழக் கூடாது பேபி? ப்ளீஸ்…” மஞ்சரி குறுஞ்செய்தி படித்ததில் இருந்து அவன் அவனாய் இல்லை. அவனின் மனம் பதற்றத்தில் படபடவென அடித்து கொண்டது.

 

“ஆரு… எனக்கு வலி தாங்க முடியல… ரொம்ப வலிக்குது” தன்னை அன்னையாய் மடி தாங்கியவள் இன்று சிறுபிள்ளையாய் வலி பொறுக்க முடியாமல் துடித்து புலம்புவதை அவனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனின் இதயத்தில் ரத்தம் வடிந்தது.

 

“பேபி… நான் என்ன பண்ணுவேன் பேபி…?” செய்யும் வகையறியாது புலம்பியவன், “நான் வேணும்ன்னா உடனே புறப்பட்டு வரவா?” அவளின் தந்தை கூறிய வார்த்தைகள் இன்னமும் அவன் காதில் ஒலித்தாலும் அதை புறம் தள்ளிவிட்டு அவன் கேட்டான்.

 

“இல்லை வேணாம் ஆரு… நீங்க வர வேணாம்… வந்து அவமானப்பட வேணாம்…” அந்த நிலையும் அவசரமாய் அவள் மறுக்க… அவளின் மறுப்பில் அவளுக்கு விசயம் தெரிந்து விட்டது என்று அவனுக்கு புரிந்தது.

 

“நம்ம குழந்தை நல்லபடியா பிறந்ததும் நானே அங்கே வர்றேன்… நீங்க கவலைப்படாதீங்க…” அவளின் இந்த பேச்சில் இதுநாள் வரை அவன் தனக்கு போட்டிருந்த கண்ணுக்கு தெரியாத கவசம் ஒன்று சுக்குநூறாய் உடைவது போலிருந்தது அவனுக்கு.

 

அவளின் வார்த்தைகள் அவனுள் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை வார்த்தையில் சொல்ல முடியாது. அவள் தனக்காய் யோசித்து யோசித்து செய்யும் ஒவ்வொரு செயலும் அவளின் மீதான அவனின் காதலை இன்னமும் அதிகரித்தது. அவளின் அன்பிற்காக இருமனதாய் ஊசலாடி கொண்டிருந்த அவன் மனம் இன்று ஒருநிலையில் அமைதியாய் அடங்கியது. அவன் இவ்வளவு நாள் காத்திருந்தது அவளின் தூய அன்பிற்காக தானா? எந்த பெண்ணிடம் மயங்காத அவன் மனம் அவளிடம் மயங்கியது பொய்த்து போகவில்லை. சரியான துணையை தான் கடவுள் அவனுக்கு கொடுத்திருக்கிறார். கடைசியில் அவளது அன்பு அவனை ஜெயித்துவிட்டது.

 

“பேபி…” அவன் உடைந்து போய் அழுதுவிட்டான். எந்த நிலையிலும் தனக்காய் யோசிக்கும் அவளின் மனது அவனுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

 

“ஆரு அழாதீங்க…” மறுபுறம் அவள் தேம்ப… அவளிடம் இருந்து அலைப்பேசியை வாங்கிய சுமதி,

 

“மாப்பிள்ள… நீங்க அவளுக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு… நீங்களும் அவள் கூட சேர்ந்து அழுகிறீங்களே… ஏற்கெனவே அவள் பயந்த சுபாவம்… அதான் பிரசவ வலி கண்டு பயப்படுறா… நீங்க கவலைப்படாதீங்க… நான் சொன்ன மாதிரி உங்க மனைவியையும், உங்க குழந்தையையும் பத்திரமா உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுறேன். அப்புறம் மாப்பிள்ள… மயூ அப்பா பேசியது எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க… ஏதோ ஆதங்கத்தில் அப்படி பேசிட்டாரு” மருமகனுக்கு தாயாய் ஆறுதல் கூறியவர்… நல்ல மனைவியாய் கணவனுக்காக அவனிடம் மன்னிப்பும் கேட்டார்.

 

“பரவாயில்ல அத்தை…” என்றவன், “பே… மயூவுக்கு எப்போ டெலிவரியாகும்…?”

 

“எப்படியும் அஞ்சாறு மணி நேரமாகலாம்… ஏன்னா முதல் குழந்தை பாருங்க.. கொஞ்ச நேரம் எடுக்கும். அவளுக்கு பிரசர், சுகர் இருக்கிறதால முன்னமே கொண்டு வந்து சேர்த்துட்டோம். பயப்பட ஒண்ணுமில்லை”

 

அவர் கூறவும் இன்னமும் பதட்டமானான் ஆரன். இருந்தாலும் அவரிடம் எதுவும் காட்டி கொள்ளவில்லை. மயூரியிடம் மேலும் ஆறுதலாய் பேசிவிட்டு அலைப்பேசியை அணைத்தவன்… முதன்முறையாய் தன்னவளுக்காய் சிந்திக்க ஆரம்பித்தான்.

 

மணிக்கொரு தரம் வந்து வதைத்த வலி… அரைமணி நேரம், கால்மணி நேரம், பத்து நிமிடம், ஐந்து நிமிடம் என்று விட்டு விட்டு வந்த வலியானது நிமிட நேரத்திற்கும் குறைவாய் குறைந்து போனது. வலி தாங்க மாட்டாமல் அழுது புலம்பியவளை பிரசவயறைக்கு அழைத்து செல்ல முற்பட்ட போது,

 

“பேபி…” தன்னவனின் அழைப்பு அவள் காதில் தேனாய் பாய்ந்தது. பிரம்மையாக இருக்குமோ என்று அந்த குரலை புறம் தள்ள நினைத்தவள் பின் மனது கேட்காமல் வலியை பல்லை கடித்து பொறுத்து கொண்டு குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவளின் கண்கள் அந்த நிலையிலும் ஆச்சிரியத்தில் சாசர் போல் விரிந்தது. அங்கே அவளை காணாது பாதியாய் இளைத்த உடலுடன், முகமெல்லாம் பதட்டத்துடன், மூச்சிரைக்க கண்கள் கலங்க அவளை இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் ஆரன்.

About lavender

Check Also

download-1

yennil uraiyum uyir nee -27

உயிர் : 27   “ஆரா… எக்சாம் எல்லாம் எப்படி பண்ணியிருக்க?” பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருக்கும் ஆரனிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *