_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee / yennil uraiyum uyir nee -29

yennil uraiyum uyir nee -29

உயிர் : 29

 

மருத்துவமனையின் வராந்தாவின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆரன் ஏதோ முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்ற அவஸ்தையோடு உட்கார்ந்திருந்தான். தன்னவளுக்கு எதுவுமாகி விட கூடாது என்று அவன் மனதில் கடவுளிடம் பிரார்த்தித்து கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் பிரசவயறையில் அலறி கொண்டிருந்த மயூரியிடமே இருந்தது.

 

அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே… எதிர்பாராமல் அவனை இங்கு கண்டதும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை அவன் தன் வாழ்நாளில் மறக்க மாட்டான். கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தவனின் மனக்கண்ணில் அந்த காட்சி வலம் வந்தது. அவளின் அன்பை, காதலை அவன் முழுதாய் உணர்ந்து கொண்ட தருணம் அது…

 

“ஆரு…” அவனை நோக்கி கை நீட்டியவளின் கையை ஓடி வந்து பற்றி கொண்டவனின் கரத்தை எடுத்து தன் கன்னத்தோடு வைத்து கொண்டு, “ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்களே ஆரு…” பல்லை கடித்து வலியை பொறுத்து கொண்டு நான்கு வார்த்தைகள் பேசுவதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது. வலியில் துடித்து கொண்டிருந்த அந்த நிலையிலும் இவனின் நலத்தை விசாரித்த அவளின் அன்பு கண்டு அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

 

“எனக்கென்ன பேபி… நான் நல்லா தான் இருக்கேன்… நீ என்னுடன் இருந்தால் எல்லாம் சரியாகி போகும்… நீ எப்படியிருக்க பேபி?” அவளின் தலையை கோதி கொண்டே அவன் கேட்ட அந்த கேள்வியில் அவள் மனம் பாகாய் உருகி அவன் காலடியில் சரணடைந்தது.

 

“நீங்க இல்லாம நான் நல்லாவே இல்ல ஆரு… நீங்க போகும் போது என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிடுங்க…” சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தவள் வலி பொறுக்காமல் அவனின் சட்டையை பிடித்து கசக்கி விட்டாள். அப்போது தான் அவனும் அவளின் நிலை உணர்ந்தான்.

 

“நர்ஸ்… அவளுக்கு வலி ரொம்ப இருக்கு போலிருக்கு…” அவன் பதட்டமாய் செவிலிப்பெண்ணிடம் கூற…

 

“வலி இருக்குது தான்… நாங்க அவங்களை டெலிவரி ரூம்க்கு கூட்டிட்டு போகணும்ன்னா நீங்க கொஞ்சம் விலகி இருங்க சார்…” கேலியாய் சொன்னவள், “நல்ல ஒரு ரொமான்ஸ் பிலிம் பார்த்த பீலிங் சார்… தம்பதின்னா உங்களை மாதிரி தான் இருக்கணும்… மேடம் நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க…” சிரித்தபடி கூறிய செவிலிப்பெண் அவளை அழைத்து சென்றார்.

 

செவிலிப்பெண் கூறியதை இப்போது நினைத்து மனதுக்குள் சிரித்து கொண்ட ஆரனின் காதில் குழந்தை ஒன்று அழும் குரல் விழ… திடுக்கிட்டு போய் கண்களை திறந்தான். பரபரப்புடன் எழுந்தவனை பார்த்து சுமதி,

 

“குழந்தை பிறந்திருச்சு மாப்பிள்ள…” மகிழ்ச்சியோடு அவர் சொல்ல… அதை கேட்டு அவனும் மகிழ்ச்சியடைந்தான். அருகில் அமர்ந்திருந்த ராகவனை அவன் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் அவர் அவனை தான் பார்த்து கொண்டிருந்தார்.

 

சுமார் பத்து நிமிடங்கள் கழித்து குழந்தையை சுத்தப்படுத்தி கொண்டு வந்த செவிலிப்பெண், “ஆண் குழந்தை…” என்று சொல்லி அவனிடம் கொடுக்க… அவன் சிறு குழந்தையை எப்படி தூக்குவது? என்று தெரியாமல் மாமியாரிடம், “நீங்களே வாங்குங்க…” குழந்தையின் மீது பார்வையை பதித்தபடி சொல்லியவனின் மனமோ எதையோ வென்று விட்ட கர்வத்தில் பெருமை பட்டு கொண்டது.

 

“எவ்வளவு அழகா இருக்கான்…” மஞ்சரி குதூகலத்துடன் குழந்தையை கொஞ்ச… சுமதியும் அதை ஆமோதித்தார்.

 

“அப்படியே நம்ம மயூ மாதிரியில்ல…” ஆசையுடன் குழந்தையை தலை முதல் கால் வரை வருடியபடி சொன்ன ராகவனின் கண்கள் கலங்கியிருந்தது.

 

அது ஆரனின் கண்களில் இருந்து தப்பவில்லை. தானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்ற நினைவில் அவரின் மன உணர்வுகளை இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவனுக்கு வந்த ஆத்திரம், கோபம், வருத்தம் எல்லாம் இப்போது ஏனோ குறைந்து இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதையெல்லாம் விட மயூரியை போன்ற அருமையான பெண்ணை தனக்காக பெற்று கொடுத்திருக்கிறாரே அதற்காகவாவது அவன் தன் மனஸ்தாபத்தை கைவிட வேண்டாமா?

 

“வாழ்த்துக்கள் மாப்பிள்ள…” வலிய வந்து வாழ்த்து சொன்ன ராகவனிடம் அதற்கு மேல் அவனால் பாராமுகம் காட்ட முடியவில்லை.

 

“தேங்க்ஸ் மாமா…” நீட்டிய அவரின் கையை பற்றி குலுக்கினான். தான் பேசிய வார்த்தைகளை மறந்து தன்னை மன்னித்து உறவு கரம் நீட்டிய மருமகனை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டார் அவர். தூய்மையான அன்பு மனம் கொண்ட அவர்களுக்குள் மன்னிப்பு கேட்கவோ இல்லை கொடுக்கவோ எந்தவொரு அவசியமும் இல்லாமல் போனது.

 

“இப்போ அவங்களை போய் பார்க்கலாம்…” மீண்டும் செவிலிப்பெண் வந்து சொல்லவும்… ‘யார் முதலில் போய் பார்ப்பது?’ என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள…

 

“மாப்பிள்ள… நீங்க போய் பாருங்க…” மருமகனின் மனது புரிந்தவராய் ராகவன் சொல்ல… அவரின் பதிலுக்காக காத்திருந்தார் போல் ஆரன் வேகமாய் உள்ளே சென்றான்.

 

“நீங்க மாப்பிள்ளையை ஏத்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க…” கணவனை நன்றியுடன் பார்த்தார் சுமதி.

 

“சுமி… நமக்குள் எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்… இவ்வளவு நாள் ஆத்திரம் என் கண்ணை மறைச்சிருந்தது… என் மகளோட மௌனம் அதை அப்படியே மாத்தியிருச்சு… அவளோட விருப்பம் தான்… என் விருப்பம்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்…” மனைவியின் தோள் மீது கை போட்டு அவர் அணைத்து கொள்ள…

 

“ஹலோ மிஸ்டர் &மிசஸ் ராகவன் ரெண்டு சின்ன குழந்தைங்க முன்னாடி என்ன ரொமான்ஸ் வேண்டியிருக்கு…?” மஞ்சரி குரல் கொடுக்க… சுமதி வெட்கத்துடன் கணவரின் அணைப்பிலிருந்து விலக…

 

“ஒரு சின்ன குழந்தை என் பேரன்… இன்னொரு சின்ன குழந்தை யாரு மஞ்சு?” சுற்றும் முற்றும் தேடினார் ராகவன்.

 

“ஏன் என்னை பார்த்தால்… சின்ன குழந்தை போல் தெரியலியா?” போலியாய் முறைத்து கொண்டு அவள் கேட்க…

 

“நாளைக்கே கல்யாணம் பண்ணி கொடுத்தா… இதே மாதிரி ஒரு குழந்தைக்கு தாயாகி நிப்ப… நீ சின்ன குழந்தையா?” இடது கரத்தில் பேரனை பிடித்து கொண்டு வலது கரத்தால் மகளின் காதை திருகினார் சுமதி.

 

“அதை முதலில் செய்ங்க…” முகத்தை சீரியசாய் வைத்து கொண்டு அவள் சொன்னாலும் அவள் கண்களில் தெரிந்த குறும்பில் தாயும், தந்தையும் வாய் விட்டு சிரித்தனர்.

 

“பேபி…” ஆரனின் மென்மையான அழைப்பில் மயூரி மெல்ல கண்ணை திறக்க… அவளது வலது கையை தன் இடது கரத்தால் எடுத்து தன் நெஞ்சோடு வைத்து கொண்டவன்… தனது வலது கரத்தால் அவளின் முடியை கோதி களைத்திருந்த அவளது நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்துவிட்டான்.

 

“ஆரு… குழந்தையை பார்த்தீங்களா?”

 

‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியவன், “பேபி… என் வாழ்க்கையை முழுமையடைய செய்துவிட்டாய்…” உதடுகள் துடிக்க உணர்ச்சிவசப்பட்டவனாய் சொன்னவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் அவளது கையில் விழுந்தது.

 

“ஆரு… ப்ளீஸ்…” அவள் அவனை தேற்ற… அவனும் சூழ்நிலை உணர்ந்து தன்னை மீட்டு கொண்டான்.

 

“ஆரு… அப்பா பேசியதுக்கு நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என்றவளின் வாய் மீது கை விரல் வைத்து தடுத்தவன்,

 

“இப்போ எல்லாம் சரியாகிவிட்டது… நீ வீணே கவலைப்பட வேணாம்…”

 

“இருந்தாலும் அப்பா பேசியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை…” அவள் அவனுக்காய் புலம்ப… சுற்றும் முற்றும் பார்த்து யாருமில்லாததை ஊர்ஜிதம் செய்து கொண்டவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

“பேசாமல் இருன்னு சொன்னா கேட்பதில்லை…” என்றவன் அவளின் இதழில் மென்மையாய் முத்தமிட… அவனின் அந்த திடீர் செயலில் நாணமுற்றவள்,

 

“ஆரு… இது ஹாஸ்பிட்டல்…” அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள…

 

“அதே தான் நானும் சொல்றேன் பேபி… இங்கே எதுவும் பேச வேணாம்…” அவனின் சொல் கேட்டு அவள் சம்மதமாய் தலையசைக்க… அவளின் அந்த அழகில் அவன் மனம் லயித்து ரசித்தது.

 

அறைக்கு அழைத்து வரப்பட்ட மயூரியிடம் ராகவன் பேச முயற்சிக்க… அவளோ வழக்கம் போல் மௌனம் காக்க… அதில் அவர் மிகவும் உடைந்து போனார்.

 

“மாப்பிள்ள… நான் அப்படி என்ன பெரிய தப்பு செய்துட்டேன்… ஒரு தகப்பனா என்னோட ஆதங்கம் அவளுக்கு ஏன் புரிய மாட்டேங்குது? ஏதோ ஆத்திரத்தில் அறிவிழந்து பேசிவிட்டேன்… அதுக்காக அவள் இப்படி கோபித்து கொள்கிறாளே… என் மனம் எவ்வளவு கஷ்டப்படும்ன்னு அவ ஏன் உணர மாட்டேங்கிறா?” ஆரனிடம் அவர் புலம்ப…

 

“அவளோட மனசை மாத்தி அவளை உங்க கிட்ட பேச வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு மாமா…” அவன் அவருக்கு ஆறுதல் சொல்ல… அதில் அவர் மனம் தெளிந்தது.

 

குழந்தை பிறந்த செய்தி கேட்டு ரிஷி அலைப்பேசியில் நலம் விசாரித்தான் என்றால்… நல்லசிவம் நேரே வந்து பார்த்துவிட்டு போனார். “ஆரா… உன்னை இந்த மாதிரி குடும்பஸ்தனா பார்ப்பதுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு. இதே போல் மகிழ்ச்சியோடு… நீ நீண்ட ஆயுளோடு வாழ வேணும்…” தகப்பனாய் அவர் வாழ்த்த… அவரது அன்பில் அவன் மனம் நெகிழ்ந்தான்.

 

“தோஸ்த் அப்பா ஆகிட்டீங்க… ஹேப்பியா இருக்கு தோஸ்த்…” ஆரனை பார்க்க வந்த வருண் அவனை ஆரத்தழுவி கொள்ள… அதை பார்த்த மஞ்சரி, “ம்க்கும்…” முகவாயை தோளில் இடித்து கொண்டாள்.

 

“தோஸ்த்… என்னோட ரூட் கிளியராக ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்…” தனிமையில் ஆரனை பார்த்து பரிதாபமாக கேட்ட வருணை பார்த்து ஆரனுக்கு சிரிப்பு வந்தது.

 

“ஏண்டா ஊருக்கே நீ ஆலோசனை சொல்லுவ… உனக்கு நான் ஆலோசனை சொல்றதா? நம்பற மாதிரியில்லையே…”

 

“போங்க தோஸ்த்… சும்மா என்னை கலாய்க்காதீங்க… நான் சீரியஸா கேட்குறேன்… என் டாலியை எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைங்க…”

 

“வருண்… எங்க லவ் மேரேஜால் ஏற்பட்ட பிரச்சினை இப்போ தான் முடிஞ்சியிருக்கு… அடுத்து உன்னோட லவ்வை அவங்க கிட்ட நான் எப்படி சொல்றது? அதிலும் மஞ்சு உன்னை பார்க்கும் போதெல்லாம் அவள் முகத்தில் சிவகாசி பட்டாசு வெடிக்குது. இந்த நிலைமையில் நான் எப்படி பேச?”

 

“தோஸ்த்… என் காதல் அவ்வளவு தானா?” விட்டால் அழுதுவிடுவான் போலிருந்த வருணை கண்டு ஆரனுக்கு இரக்கமாய் இருந்தது. எவ்வளவு ஜாலியாக வாழ்க்கையை லேசாக எடுத்து கொள்பவன் இந்த வருண்… அவனையே இவ்வளவு சீரியசாக யோசிக்க வைக்கிறதே இந்த காதல்… மனதில் எழுந்த வியப்புடன் அவனை பார்த்த ஆரன்,

 

“கவலையை விடு வருண்… உன் காதலை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு… ஆனால் அதுவரை நீ மஞ்சு பின் அலையாமல் இருக்க வேணும். அப்படின்னா தான் நான் இதை அரேஞ்சுடு மேரேஜா முடிக்க முடியும்” ஆரன் சொன்னதை கேட்டு வருண் முகம் பளிச்சிட்டது.

 

“எப்படி இதை செய்ய போறீங்க தோஸ்த்…?” ஆச்சிரியம் தாங்காமல் அவன் கேட்க…

 

“அதை செய்ய போவது நானில்லை… வேறொருத்தர்…” என்று சொன்ன ஆரனின் மனக்கண்ணில் ரிஷியின் பிம்பம் வந்து போனது.

 

“எப்படியோ தோஸ்து நீங்க என் காதலை கல்யாணத்தில் முடித்தால் சரி…” அவனை கட்டி பிடித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தவன்… தூரத்தில் நின்றிருந்த மஞ்சரியை ஏக்கத்துடன் பார்த்து கொண்டே விடை பெற்று சென்றான்.

 

********************************

 

ஆரனுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த வனஜாவிற்கு மனம் நிலையில்லாமல் தவித்தது. பேரனின் பாசம் அவரை சென்னைக்கு போக விழைந்தது. அதற்கு முன் அவர் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருந்தது. அதையெல்லாம் செய்து முடித்துவிட்டு தான் அவர் ஆரனை சந்திக்க போக வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்து கொண்டார். அதை செய்து முடிக்க அவருக்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது. சென்னைக்கு கிளம்பும் ஆரனுக்கு தேவையானவற்றை எடுத்து பெட்டியில் வைத்தவர் கண்ணில் பேரனுக்கு என்று வாங்கி வைத்தது பட்டது. இதை மகன் ஏற்பானா? என்று மனதில் சந்தேகம் தோன்றிய போதும் பேரன் மீதிருந்த பாசம் அதை வெல்ல… ஆசையுடன் அனைத்தையும் பெட்டியில் வைத்து மூடினார்.

 

மருத்துவமனையில் இருந்து மயூரி வீடு திரும்பும் நாளின் போது ஆரன் அவள் வீட்டிற்கு வர மிகவும் தயக்கம் காட்டினான். என்ன தான் ராகவனை மன்னித்தாலும் அவர் பேசிய வார்த்தைகளை அவனால் மறக்க முடியவில்லை. அதனால் மிகுந்த தயக்கம் காட்டினான்.

 

“பேபி நீ உன் வீட்டுக்கு போ… ஒரு மாதம் கழித்து நான் உன்னை கூட்டிட்டு போறேன்…” மயூரி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள். இப்போது அவள் இருக்கும் நிலையில் விமானத்தில் கூட பயணம் செய்வது என்பது முடியாத காரியம்.

 

“மாப்பிள்ள… அது உங்க மாமனார் வீடில்ல… அது என் அப்பா எனக்கு கொடுத்த சீதன வீடு… அதனால நான் கூப்பிடறேன் நீங்க வாங்க…” சுமதி அவனை அழைக்க… ராகவனும்,

 

“நான் பேசியது தப்பு தான் மாப்பிள்ள… தயவுசெய்து நீங்க வீட்டுக்கு வரணும்…” மனம் நெகிழ்ந்து அவர் சொல்ல…

 

“நான் இங்கே இருக்க போவது இன்னும் இரண்டு நாள் தான். வேணும்ன்னா ஒண்ணு செய்றேன்… இரவு நான் வருணுடன் தங்கிக்கிறேன்… பகல் அங்கே வந்து மயூ கூடவும், குழந்தை கூடவும் இருக்கேன்…” அவன் சொல்ல… இந்த மட்டும் அவன் ஒத்து கொண்டானே என்று அனைவரும் நிம்மதி மூச்சு விட்டனர்.

 

“ஆரன் இருக்கானா?” மருமகனின் பேர் சொல்லி விசாரித்த அந்த பெண்மணியை ஆச்சிரியத்துடன் பார்த்த ராகவன்…

 

“உள்ளே இருக்காரு… நீங்க உட்காருங்க… நான் கூட்டிட்டு வர்றேன்…” அங்கிருந்த சோபாவில் அவரை அமர சொன்னவர் உள்ளே சென்றார். யாருமில்லை என்று கூறியவனை தேடி ஒருவர் வந்திருப்பது மற்றும் அவர் உரிமையுடன் அவன் பேரை சொன்னது எல்லாம் அவருக்கு மிகுந்த வியப்பை அளித்தது.

 

மயூரியின் அறையில் மகனை கையில் வைத்து கொஞ்சி கொண்டிருந்த ஆரன் ராகவனின் வருகை உணர்ந்து அவரை பார்த்து சிரித்தான்.

 

“மாப்பிள்ள… உங்களை தேடி ஒரு லேடி வந்திருக்காங்க…”

 

“லேடியா…?” புருவம் சுருக்கி யோசித்தவனால் யார் வந்திருக்க கூடுமென்று அனுமானிக்க முடியவில்லை. மயூரியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு குழப்பத்துடன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

 

அங்கே வரவேற்பறையில் அமர்ந்திருந்த வனஜாவை அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. வயதாகி இருந்தாலும் தாயை அவனால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. உயரழுத்த மின்சாரம் தாக்கியது போல் அப்படியே அவன் உறைந்து போய் நின்றுவிட்டான். அவனின் வரவை உணர்ந்து எழுந்தவர்… தன் வயதை மறந்து மகனை நோக்கி ஓடி வந்தார்.

 

“ஆரா…” கணவனின் மறுபிரதிபலிப்பாய் இருந்த மகனை ஆசை தீர அவர் பார்க்க… அவனோ அவரை முறைத்து பார்த்தவன்… பின் முகத்தை திருப்பி கொண்டான். இதையெல்லாம் ராகவன், சுமதி ஆச்சிரியத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

 

“ஆரா… என்னை மன்னிக்க மாட்டியா? அம்மான்னு கூப்பிட மாட்டியா?” அவர் குரல் தழுதழுத்தது. அவனின் அம்மா அவர் என்பதை அறிந்த ராகவனும், சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

“அதுக்கான அர்த்தத்தை உணராதவங்களை அப்படி கூப்பிடுவதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை… இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க…?” ஆரனின் குரல் ஆத்திரமாய் ஒலித்தது. குழந்தையை தூங்க வைத்து கொண்டிருந்த மயூரி அவனின் சத்ததில் அங்கே வந்தாள். அவள் வனஜாவை பார்த்து யாரென்று தெரியாமல் முழித்தாள்.

 

“என் பேரனை பார்க்க வந்தேன் ஆரா…”

 

“மகனே இல்லை என்கிறேன்… இதில் பேரன் எங்கிருந்து வந்தான்? உங்கள் உறவு வேணாம்ன்னு தானே இத்தனை காலம் நான் ஒதுங்கியிருந்தேன்… இப்போ வந்து ஏன் என் உயிரை எடுக்கிறீங்க?” அவனின் பேச்சிலிருந்து அவர் அவனுடைய அன்னை என்பதை மயூரி உணர்ந்து கொண்டாள். மகனின் கடுமையில் வனஜா மருமகளின் பக்கம் வந்தார்.

 

“நீ ஆராவின் மனைவி தானே…” அவரின் கேள்விக்கு மயூரி ஆம் என்பது போல் தலையசைக்க…

 

“நீயாவது அவனிடம் சொல்ல கூடாதாம்மா? என் பேரன் முகத்தை பார்த்திட்டு நான் போயிர்றேன்… அவனை கொண்டு வாம்மா…” அவரின் பேச்சில் அவள் கணவனின் முகத்தை பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவனின் இறுகியிருந்த முகத்திலிருந்து அவளால் ஒன்றும் உணர முடியவில்லை.

 

“அவர் சரின்னு சொன்னா… நான் எங்கள் மகனை எடுத்து வர்றேன்…” கணவனின் முடிவு தான் தன் முடிவு என்பது போல் அவள் தன் வார்த்தைகளில் மறைமுகமாக அதை உணர்த்த… அவளின் பதிலில் ஆரனின் கண்கள் பளிச்சிட்டது. அவன் அவளை பார்த்த பார்வையில் இருந்தது… அன்பா? காதலா? இல்லை நன்றி உணர்வா? என்னவென்று புரியாத உணர்வுகள் அதில் ஒளிந்திருந்தது.

 

“ம்… கணவன் சொல்லை பின் பற்றி நடக்கும் மனைவி… உன்னை பார்த்தா பெருமையாயிருக்கும்மா… என் மகன் கொடுத்து வைத்தவன்…” அவளை பெருமையாய் சொன்னவர்… “நானும் இது போல் இல்லாமல் போனேனே… காலம் கடந்து வந்த ஞானோதயத்தால் யாருக்கும் பலனில்லை…” விரக்தியாய் சொன்னவர் மகனிடம் திரும்பி…

 

“நான் இழந்த இழப்பின் அளவை இப்போது நான் உணர்ந்து கொண்டேன் ஆரா… நீ என்னை மன்னிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். நீ மன்னிக்கும்படியான காரியத்தை நான் செய்யவில்லைன்னும் எனக்கு தெரியும். நான் இங்கே வந்தது பேரனை பார்ப்பதற்காக தான் என்றாலும்… உன் சொத்தை உன்னிடம் ஒப்படைக்க தான் உன்னிடம் வந்தேன்”

 

“உங்க சொத்து எதுவும் எனக்கு வேணாம்…” அவன் பட்டுக்கத்தரித்தார் போல் பேச…

 

“ஒப்படைக்க வேண்டியது என் கடமை… இதை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி முடிவெடுக்கும் உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு…” என்றவர் கையிலிருந்த சிறிய பெட்டியை அங்கிருந்த சோபாவின் மீது வைத்தவர், “இதற்கு மேல் இந்த பாரத்தை தூக்கி சுமக்க என்னால் முடியாது… வாழ்ந்த வரை போதுமென்று எனக்கு தோணுகிறது” மீண்டும் மகன் முன் வந்தவர்,

 

“கடைசியாய் ஒரு முறை கேட்கிறேன்… ஆரா என்னை மன்னிக்கவே மாட்டியா?” கைகள் இரண்டையும் ஏந்தி கொண்டு அவர் கேட்டது ராகவன், சுமதி, மயூரி மூவருக்கும் கண்கள் கலங்கியது. ஆனாலும் ஆரனின் மனதை அறியாமல் தாங்கள் ஏதும் சொல்ல கூடாது என்று பேசாமலிருந்தனர். அவனோ அன்னையின் நாடகம் தன் மனதை சிறிதும் மாற்றாது என்பது போல் கல்லை போல் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான்.

 

“நான் போகிறேன் ஆரா… அருமையான வாழ்க்கையை தொலைத்த நான் வாழவே அருகதையற்றவள்…” என்றபடி அவனிடம் விடைபெற்றவர் அங்கிருந்து வேகமாய் வெளியேறினார்.

 

அவர் அங்கிருந்து சென்றும் வெகுநேரம் கல்லாய் நின்றிருந்தவனை தொந்திரவு செய்யாமல் மூவரும் அங்கிருந்து அகன்றனர். ஆரனின் மனம் பலவித உணர்ச்சிகளில் தத்தளித்து கொண்டிருந்தது. அதை சமன் செய்ய அவன் தன் மனைவியை நாடி சென்றான்.

 

கட்டிலில் அமர்ந்திருந்த மயூரியிடம் வந்தவன், “பேபி அவங்க… அவங்க…” கண்கள் கலங்க, முகம் சிவந்திருக்க அவன் நின்றிருந்த தோற்றம் அவள் மனதை உலுக்க… இரு கரத்தை அவனை நோக்கி நீட்டியவள், அவனை பார்த்து வாவென்பது போல் தலையசைக்க… அடுத்த கணம் அவன் அவள் கையில் சரணடைந்தான். தன் வேதனைக்கு எல்லாம் அவள் தான் மருந்து என்பது போல் அவள் மடியில் படுத்து அவளை இடுப்போடு சேர்த்து அணைத்திருந்தவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவனின் மனதை உணர்ந்தவளாய் அவள் அவனின் தலையை ஆறுதலாய் வருடி கொடுத்தாள்.

 

***************************************

 

ஆரனிடம் பேசிவிட்டு வெளியில் வந்த வனஜா காரோட்டியிடம், “என்னை ரயில்வே ஸ்டேசனில் இறக்கி விட்டுட்டு… நீ ஊருக்கு போ…” என்று கட்டளையிட… அவர் சொன்னதை அவன் அப்படியே செய்தான். இறங்கும் போது தன் கைப்பையை எடுத்தவர் பின்பு என்ன நினைத்தாரோ… அதிலிருந்த பணத்தை எல்லாம் காரோட்டியிடம் கொடுக்க… அவனோ அவரை விசித்தரமாய் பார்த்தவன் பணத்தை கண்டதும் வாயெல்லாம் பல்லாக அதை வாங்கி கொண்டான். விறுவிறுவென ரயில் நிலையத்திற்குள் நுழைந்தவர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான ஆட்களோடு கலந்து காணாமல் போனார்.

 

கங்கை ஆறு என்றும் போல் இன்றும் அமைதியாய் ஓடி கொண்டிருக்க… அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் தான் எப்பொதும் போல் சலசலத்து கொண்டிருந்தனர். அங்கு கரையோரம் நின்று கொண்டிருந்த வனஜா ஆற்றை வெறித்து பார்த்து கொண்டிருந்தார். தன் கையிலிருந்த கைப்பையை திறந்து அதிலிருந்த தன்னோட அடையாள அட்டை, கிரெடிட் கார்ட் அட்டை எல்லாவற்றையும் எடுத்தவர் அதை உடைத்து ஆற்றில் தூக்கி போட்டார். பின்பு தானும் ஆற்றில் இறங்கினார்.

 

அவரின் மனக்கண்ணில் கண்ணன் மற்றும் ராமனின் முகங்களே மாறி வந்தது. கண்ணனோடு காதலுடன் கூடிய இனிமையான தாம்பத்தியமும், ராமனுடன் கூடிய காமத்துடன் கூடிய களியாட்டமும் அவரின் கண் முன்னே தோன்றி அவரின் மனசாட்சியை குத்தி கிழித்தது. அதன் தாக்கம் தாங்க முடியாமல் கண்ணை மூடியவர் தன் நடையை மட்டும் நிறுத்தவில்லை. அவரின் முட்டிக்கால் அளவு உயரமிருந்த ஆற்றின் நீர் அவரின் தோளுக்கு வந்து பின்பு மெல்ல மெல்ல முன்னேறி அவரின் தலையை மூழ்கடித்தது.

 

நாசி துவாரம் வழியே நுழைந்த நீரானது அவரின் மூச்சு சுவாசத்தை திணற செய்தது. மூச்சு காற்றிற்காக திறந்த அவரின் வாய் வழியே நீரானது அவரின் உடலுக்கு செல்ல… அது மெல்ல அவரை மரணத்தின் வாயிலை நோக்கி அழைத்து சென்றது. இவ்வளவுக்கும் அவர் உயிர் வாழ்வதற்காக போராடவில்லை. நன்கு நீச்சல் தெரிந்த அவர் வாழ விருப்பம் இல்லாமல் மரணத்தை இரு கை கொண்டு ஆசையுடன் அரவணைத்து கொண்டார்.

 

இறுதியாய் அவர் மூச்சு விடும் போது கண்ணன் சிரித்த முகமாய் அவரை வாவென்பது போல் இருகரம் நீட்டி அழைப்பது போல் அவருக்கு பிரம்மை தோன்ற… “அத்தான்… உங்களை தேடி நான் வர்றேன்… நீங்களாவது என்னை மன்னித்து ஏற்று கொள்வீங்களா?” அவர் உதடுகள் மெதுவாய் முணுமுணுக்க… அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து சிரித்த கண்ணனின் பிம்பம் தன் கையை அவரை நோக்கி நீட்ட… முகம் மலர கணவனின் கையை பற்றிய வனஜாவின் உயிர் அடுத்த நொடி பிரிந்து தன்னவனிடம் சென்று ஐக்கியமானது.

About lavender

Check Also

download-1

yennil uraiyum uyir nee -27

உயிர் : 27   “ஆரா… எக்சாம் எல்லாம் எப்படி பண்ணியிருக்க?” பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருக்கும் ஆரனிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *